துபாயில் பேருந்து விபத்து: 9 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி!!
துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பேருந்து ஒன்று டிரக்குடன் மோதி விபத்துக்குள்ளானதில் 9 இந்தியர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
துபாயின் பிரதான நெடுஞ்சாலையான துபாய் எமிரேட்ஸ் சாலையில் இன்று காலை ஜெபல் அலி பகுதியில் வேலை செய்யும் 27 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றது.
பேருந்தில் இந்தியர்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் இருந்தனர். எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் எமிரேட்ஸ் சாலையில் பேருந்து வேமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.
ட்ரக் மீது மோதியதில் பேருந்து, 5 மீட்டர் தொலைவிற்கு தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலே பலியாகினர். உடனடியாக மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் பலியாகினர்.
விபத்தில் பலியானவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், பலியான 15 பேரில் 9 பேர் இந்தியர்கள் என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாக துபாய் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
காயம் அடைந்த இந்திய மற்றும் வங்கதேச தொழிலாளர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
துபாயில் 2013- ம் ஆண்டு நடந்த பயங்கர விபத்தில் வெளிநாடுகளை சேர்ந்த 23 தொழிலாளர்கள் பலியாகினர். இதனை அடுத்து இன்று நடந்துள்ள இந்த விபத்து மிக பெரியதாக தெரிவதாக துபாய் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Category: வளைகுட செய்தி
0 comments