நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் முதலீடு: எஸ்.பி. எச்சரிக்கை!!
தனி நபரிடம் சீட்டுக் கட்டுதல், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாறுதல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட எஸ்.பி. சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் தனி நபர்கள் நடத்தும் ஏலச் சீட்டுக்கள், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பதிவு செய்யப்படாத, முறையான அனுமதி பெறாத நிதி நிறுவனங்களில் பணம் கட்டுதல், மார்க்கெட்டிங் ஏஜென்சி என்ற பெயரில் குலுக்கல் சீட்டு நடத்தி பணம் பறித்தல், பண்டிகைக் கால சீட்டு என பணம் வசூலித்தல் போன்றவற்றால் பொதுமக்கள் அதிகளவில் ஏமாற்றப்படுகின்றனர்.
இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் அதற்காக பல சிரமங்களையும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கான செலவுத் தொகை நீதிமன்ற வழக்குத் தொகை என பல வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிரமம் இருக்கும்.
எனவே அதிக வட்டிக்கு ஆசைப்பட்டோ, குலுக்கல் பரிசுகளுக்கு ஆசைப்பட்டோ இதுபோல் அனுமதியின்றி இயங்கும் நிதி நிறுவனங்களில் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Category: மாநில செய்தி
0 comments