வேப்பந்தட்டை அருகே கணவன்–மனைவி விஷம் குடித்து தற்கொலை!
குன்னம், பிப். 4-
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகள் செல்வாம்பாள் (வயது 31). இவருக்கும் அருகில் உள்ள மாவிலங்கு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (35) என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு அகிலன் (7) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் சீனிவாசன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகவில்லை.
இதனால் மனம் உடைந்த சீனிவாசன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்தை -குடித்து விட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசனின் மனைவி செல்வாம்பாளும் விஷம் குடித்தார். இவரும் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்து விட்டார். செல்வாம்பாள் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார்.
உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கணவர் விஷம் குடித்ததால் அதிர்ச்சி அடைந்த மனைவியும் விஷம் குடித்து 2 பேரும் இறந்ததால் அந்த தம்பதியின் 7 வயது மகன் தாய், தந்தையை இழந்து பரிதவிப்புக்குள்ளாகி உள்ள சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Category: மாவட்ட செய்தி
0 comments