துபாயில் இருந்து சென்னைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் உள்பட 2 பேர் கைது!
துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த ஐதராபாத் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலி பாஸ்போர்ட்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது ஐதராபாத்தை சேர்ந்த விமலா (வயது 24) என்பவர் வேறுநபரின் பாஸ்போர்ட்டில் தனது புகைப்படத்தை மாற்றி ஒட்டி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதேபோல துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளையும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த விமானத்தில் சென்னை வந்த கேரளாவை சேர்ந்த இசாக்கிகோயா (54) என்பவரும் வேறு நபரின் பாஸ்போர்ட்டில் தனது புகைப்படத்தை மாற்றி ஒட்டி வந்ததை கண்டுபிடித்தனர்.
2 பேர் கைது
இதையடுத்து போலி பாஸ்போர்ட்டில் பிடிபட்ட 2 பேரையும் விமான நிலைய போலீசாரிடம் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் போலி பாஸ்போர்ட்டு வழக்கில் விமலா, இசாக்கிகோயா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாநில செய்தி
0 comments