.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க இறுதி பேருரை...!!!!!!

Unknown | 10:00 AM | 0 comments

மனித குலத்தின் வழிகாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க இறுதி பேருரை...!!!!!! - ஒரு நினைவூட்டல் 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

அராஜகம் செய்யாதீர்கள்!

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.
(ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

அநீதம் அழிப்பீர்!

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [1]

உரிமைகளை மீறாதீர்!

மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

பெண்களை மதிப்பீர்!

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!
(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.
(ஸஹீஹ்ல் புகாரி 4402)

சொர்க்கம் செல்ல வழி!

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.
(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.
(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இறுதி இறை வசனம்.

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

""இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)
ஸஹீஹ்ல புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்) -

எனதருமை சகோதரர்களே !.... நபிகளாரின் மீது நாம் கொண்டிருக்கின்ற அன்பும், பாசமும், நேசமும், உண்மையென்றால் நம் வாழ்க்கையின் அத்துனை துறைகளிலும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன்மாதிரியை கொண்டு வருவது தான், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மீது நாம் வைத்திருக்கும் எல்லையில்லாத அன்புக்கும், நேசத்திற்குமான அளவுகோலாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுபவர்களுக்கு திண்ணமாக! அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஓர் அழகிய முன் மாதிரி இருக்கின்றது.” ( குர்ஆன்: 33:21.)

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“புகழுக்கும், போற்றுதலுக்கும் பிறகு, அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக! “வார்த்தைகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் – கிதாபுல்லாஹ் – வார்த்தையாகும். வழிகாட்டலில் மிகச் சிறந்தது முஹம்மது {ஸல்} அவர்களின் வழிகாட்டலாகும். காரியங்களில் மிகக் கெட்டது, {மார்க்கத்தில்} புதிது புதிதாக தோற்றுவிப்பதாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும்.” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்

அருமை சகோதரர்களே !...நபிகளாரின் வழிகாட்டலை வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தில் கடைபிடிக்க முயற்ச்சி செய்வோம் எல்லாம் வல்ல ரஹ்மான அல்லாஹ் நமது முயற்ச்சியினை நிச்சயம் வெற்றியாக்கி தருவான்

இன் ஷா அல்லாஹ் .




Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1