என்று மாறும் இந்த இழி நிலை ...?
சீரழிந்த சமூகமாய்
மாறிக்கொண்டிருக்கிறது
திருமறையில் புகழப்பட்ட
தலை சிறந்த சமுதாயம் ...
ஈயத்தால் வார்க்கப்பட்ட
இஸ்லாமியர்களின் கோட்டைகளில்
கருத்து வேறுபாட்டின்
ஆயிரமாயிரம் ஓட்டைகள் ...
நடுநிலையில் நடக்க வேண்டியவர்கள்
சமநிலை தவறி தடம் மாறும்
அவல நிலை ....
ஓரிறைக் கொள்கையை
உச்சரித்துக்கொண்டு
ஓராயிரம் கொள்கைகளின் பின்னால்
ஊர்வலம் போகும் உம்மத்துகள் ...
வழிபாடு முடிந்தவுடன்
மார்க்கத்தை மூட்டை கட்டி விட்டு
வாழ்வியலில்
சைத்தானின் கோட்பாட்டை
சுமந்து நடக்கும்
இஸ்லாத்தின் சொந்தங்கள் ...
சமூக வலைத்தளங்களில்
சகோதரர்களின் மானத்தை
விலை பேசும்
மார்க்க வியாபாரிகள் ...
இறைவா ...!
எங்கள் தலைவர்கள்
ஒற்றுமை கயிற்றினை
அறுத்து விட்டு...
கண்ணை மூடி
இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்
வேற்றுமை கயிற்றினை ...
என்று மாறும்
இந்த இழி நிலை ...?
H.கலீல் ரஹ்மான்.
Category: கவிதை
0 comments