மொழியறிவும், உலகறிவும் நமக்கு முக்கியமானவை!
உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்து, பிற தகுதிகளையும் சரியாக பெற்றிருந்தால், உங்களின் ரெஸ்யூம், மற்ற ரெஸ்யூம்களைவிட அதிக முக்கியத்துவத்தைப் பெறுவது நிச்சயம்.
ஒரு தென்னிந்திய மாநிலத்தை சேர்ந்தவராக இருந்து, ஒரு உயர்கல்வியை மேற்கொண்டவராக நீங்கள் இருக்கையில், உங்களின் தாய் மொழியுடன் சேர்ந்து, ஆங்கில மொழியிலும் நீங்கள் புலமைப் பெற்றவராக இருப்பது இயல்பே.
உங்களுக்கான பணி வாய்ப்பு வட இந்தியாவில் கிடைக்கலாம். இதன்மூலம், இந்தி மொழியை நன்கு சரளமாக கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும். அதேசமயம், கல்லூரியில் படிக்கும்போதே, தேவையான சில மொழிகளைக் கற்றுக்கொள்வது மிகவும் நல்லது.
இந்தியாவைப் பொறுத்தவரை, வட பகுதிகளில் இந்தி மொழி பரவலாக பேசப்படுகிறது. எனவே, அந்த மொழியை குறைந்தபட்சம் நன்றாக பேசும் அளவிற்காவது கற்றுக்கொண்டால், நமக்கான பணி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளலாம்.
கல்லூரி படிப்பின்போது...
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே, உங்களின் எதிர்கால வாழ்விற்கு சிறப்பான முறையில் தயாராக தொடங்கிவிட வேண்டும். உங்களின் பாடப்புத்தகங்கள் மற்றும் அசைன்மென்ட் பணிகள் ஆகியவற்றில் தேவையான நேரம் செலவழித்தது போக, படிப்பிற்கு வெளியே, பல நல்ல புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இதன்மூலம் நமது அறிவும், சிந்தனைத் திறனும் விரிவடையும். நாம் படிக்கும் புத்தகங்கள், நமக்கு உண்மையான உலக சூழலை விளக்குவதாகவும், நிஜமான வரலாற்றை சொல்லித் தருவதாகவும், நமக்கான பணி வாய்ப்புகளைப் பற்றி கூறுவதாகவும், நமது பணிக்கான தகுதிகளை நன்றாக பெருக்கிக் கொள்வது பற்றிய ஆலோசனைகளை கொண்டிருப்பதாகவும் அந்தப் புத்தகங்கள் இருக்க வேண்டும்.
அம்பேத்கர், காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், லியோ டால்ஸ்டாய் ஆகியோரின் எழுத்துக்களைப் படிப்பது பயன்தரும்.
மேலும், நாம் வாழும் உலகில் நமது திறனுக்கேற்ற என்னென்ன பணி வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பற்றி ஒவ்வொரு மாணவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், ஏதேனும் ஒரு வாய்ப்பு அடைபடும்போது, இன்னொரு வாய்ப்பை நோக்கி முன்னேற முடியும்.
மேலும், ஒருவரின் மனோதிடத்தை அதிகரிக்கச் செய்து, அவரின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாய் இருக்கும் புத்தகங்களைப் படிப்பது மிகவும் நன்று. அதற்காக, அதுபோன்ற தலைப்புகளில் இருக்கும் புத்தகங்களையெல்லாம் படிக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
அளவுக்கதிகமாக திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சிகளைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதேசமயம், நண்பர்களுடன் தேவையில்லாத அரட்டையில் ஈடுபட்டு பொழுதுபோக்குவதையும் தவிர்ப்பது நல்லது. உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
Category:
0 comments