மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி மின் தட்டுப்பாட்டை போக்கும் வழிமுறைகள்!
திருச்சி, டிச. 9–
தென்னக ரெயில்வே திருச்சி கிளை சார்பில் கடந்த 7–ந் தேதி முதல் ஒரு வாரம் எரிசக்தி சிக்கன வாரமாக கடை பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இன்று எரிசக்தி விழிப்புணர்வு அரங்கம் திறக்கப்பட்டது. அரங்கத்தை திருச்சி கோட்ட மேலாளர் மஞ்சுளா ரெங்கநாதன் திறந்து வைத்தார். இந்த அரங்கத்தில் ரெயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 18–ம் நூற்றாண்டில் மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி பயன்படுத்தியது குறித்தும், 19–ம் நூற்றாண்டில் குண்டு பல்புகள் பயன்படுத்தியது மற்றும் அதன் தீமைகள் குறித்தும், 20–ம் நூற்றாண்டில் சி.எப்.எல். பல்புகள் பயன்பாடு குறித்தும், 2020–ம் ஆண்டுகளில் எல்.இ.டி. பல்புகள் பயன்படுத்துவது குறித்தும் அதனால் மின்சாரம் மிச்சப்படுதல் குறித்தும், இதை கடைபிடிக்காவிட்டால் மீண்டும் கற்காலத்தில் பயன்படுத்தியது போல மெழுகுவர்த்தியை பயன்படுத்தும் நிலை ஏற்படும் என்ற விழிப்புணர்வு படங்கள், வாசகங்கள் ரெயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரெயில் நிலையஅதிகாரிகள் சார்பில் துண்டு பிரசுரம் ரெயில் பயணிகளிடம் வழங்கப்பட்டது. இதில் தேவை இல்லாத போது மின் விளக்குகளையும், மின் விசிறிகளையும் உடனே அணைக்க வேண்டும், பகல் நேர வெளிச்சத்தையும், இயற்கை காற்றோட்டத்தையும் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும், 60 வாட் குண்டு பல்பு தரும் வெளிச்சத்தை 15 வாட் சிறிய குழல் விளக்குகளை உபயோகித்து மின்சாரத்தை சிக்கனப்படுத்தவும், குளிர் சாதன பெட்டிகளை சுவரில் இருந்து சுமார் 30 செ.மீட்டர் இடைவெளி விட்டு வைக்கவும், குளிர் சாதன பெட்டியின் கதவை குறைந்த நேரம் திறந்து வைப்பதால் மின்சாரம் சிக்கனத்தை கடை பிடிக்கலாம் என்றும், குளிர் சாதன பெட்டிகளின் கண்டன்சர் மற்றும் வெளிப்புறம் உள்ள இடங்களில் தூசியை அடிக்கடி சுத்தம் செய்து காற்று நன்கு படும்படி செய்து மின் உபயோகத்தை குறைக்கலாம் என்றும், லாப்டாப், செல்போனில் பயன்படும் பேட்டரி சார்ஜர்களை பிளக்கில் வைத்திருந்தாலே மின்சாரம் செலவாகும் என்றும், தொலைக்காட்சி மற்றும் இதர ஒளி, ஒலி உபகரணங்களை ரிமோட் மூலம் மட்டும் ஆப் செய்யாமல் சுவிட்ச் மூலம் ஆப் செய்வதால் மின்சாரம் சேமிக்கலாம், ஜீரோ வால்ட் குண்டு பல்புகளுக்கு பதில் சி.எப்.எல். ஜீரோ வால்ட் பல்புகளை பயன்படுத்தி மின்சாரம் சேமிக்க கேட்டும், மின் கொதிகலனுக்கு பதிலாக சசூரிய கொதிகலன் பயன்படுத்தலாம் என்றும், தரமான மின் உபகரணங்களை பயன்படுத்தினால் மின்சாரம் சேமிக்கலாம் என்றும் மேலும் மின்சாரம் பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. இதை திருச்சி ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில் பயணிகள் ஏராளமானோர் வாங்கியும்ட விழிப்புணர்வு அரங்கை பார்த்தும் சென்றனர்.
Category: துனுக்குகள்


0 comments