தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஒரே நாளில் ஓட்டுப்பதிவு தேர்தல் கமிஷன் கூட்டத்தில் அனைத்து கட்சிகள் கோரிக்கை!
சென்னை, டிச.28-
பாராளுமன்றத்துக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இந்திய தேர்தல் கமிஷனின் சார்பில் நேற்று அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
துணை தேர்தல் கமிஷனர் சுதிர் திரிபாதி தலைமையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கலந்து கொண்டவர்கள்
அ.தி.மு.க. சார்பில் மனோஜ் பாண்டியன், பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கிரிராஜன், தே.மு.தி.க. சார்பில் பி.பார்த்தசாரதி, வி.சி.சந்திரகுமார், காங்கிரஸ் சார்பில் ஏ.எஸ்.சக்திவடிவேலு, சைதை ரவி, பாரதீய ஜனதா கட்சி சார்பில் கே.டி.ராகவன், எஸ்.ஆதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பி.சேதுராமன், டி.எம்.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் என்.குணசேகரன், எஸ்.ரமணி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எஸ்.ரஜினிகாந்த், ஒய்.ஏ.நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஒரே நாளில் ஓட்டுப்பதிவு
காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளை துணை தேர்தல் கமிஷனர் கேட்டறிந்தார். கூட்டத்தில் பேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர், கட்சி களின் சார்பில் கூறப்பட்ட கருத்துகளை அந்தந்த கட்சி பிரதிநிதிகள் நிருபர்களிடம் தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-
நடத்தை விதிகள்
தி.மு.க:- பொதுவாக எல்லா கட்சியினருமே தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறினர். பணம் கொடுத்து செய்திகளைவெளியிடச்செய்யும் முறை பற்றி எங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பத்திரிகைகளுக்கென்று நடத்தை விதிகளை உருவாக்கி, அதன் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினோம்.
ஆட்சியில் உள்ள கட்சிகள் தங்கள் தேர்தல் சின்னத்தை மக்கள் நலத்திட்ட உதவிகளில் பதித்து, அதன் மூலம் மற்ற கட்சிகளுக்கு இல்லாத சலுகையை பெறுகிறார்கள்.
தேர்தல் சின்னம் என்பது தேர்தல் ஆணையத்தின் சொத்து. எனவே ஆட்சியில் இருக்கிற ஒரே காரணத்துக் காக அதை நலத்திட்டங்களில் பயன்படுத்தினால், அந்த சின்னத்தை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அந்த கட்சிக்கு புதிய சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
பேஸ்புக் மூலம் பிரசாரம்
பிரசாரத்துக்கு செல்லும் தலைவர், கட்சிக்காக அல்லாமல் ஒரு வேட்பாளருக்காக பிரசாரம் செய்தால், அதற்கான தேர்தல் செலவு அந்த வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்ற விதியை தளர்த்த வேண்டும். பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகள் அனைத்திலும் மத்திய போலீசார் மூலம் கூடுதல் பாதுகாப்பு அளிப்பதோடு, வீடியோ பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
செல்போன் எஸ்.எம்.எஸ். மற்றும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வாக்கு கேட்பதை எப்படி முறைப்படுத்துவது என்பது பற்றி தேர்தல் கமிஷன் கருத்து கேட்டது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கூறியுள்ளன.
தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தங்கள் ஓட்டுகளை பதிவு செய்வதில்லை. அதை முறைப்படுத்த வேண்டும். அனைவரும் வாக்குப்பதிவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறோம்.
சிக்கலான நடைமுறை
பாரதீய ஜனதா:- தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய வாக்காளர் பதிவில், தற்போது உள்ள சிக்கலான நடைமுறைகளை தவிர்த்து எளிமைப்படுத்த வேண்டும். ஓட்டுக்கு பணம் என்ற முறைகேடு மோசமான உதாரணமாக உள்ளது. அதை ஒடுக்குவதற்கு கடுமையான நடவடிக்கை தேவை. தேர்தல் அன்று வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் கட்சி சார்பானவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.
ஓட்டுக்கு பணம்
தே.மு.தி.க:- எங்கள் கட்சி தலைவர் விஜயகாந்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் கருத்துகளை முன்வைத்தோம். தமிழகம், புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதுவரை நடந்த தேர்தல்களில், பணம் கொடுத்து ஓட்டுகள் வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த குற்றத்துக்காக ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. எனவே, அனைத்துமே சம்பிரதாயமாக நடைபெறுகிறதோ என்ற எங்கள் சந்தேகத்தை கூறி இருக்கிறோம். பணம் கொடுக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த கட்சி வேட்பாளர் ஆளாகிறாரோ அல்லது ஆதாரப்பூர்வமாக குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டாலோ, தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அவர் தடை செய்யப்பட வேண்டும்.
விஜயகாந்துக்கு மத்திய பாதுகாப்பு
தேர்தல் சுற்றுப்பயணமாக செல்லும் எங்கள் கட்சி தலைவர் விஜயகாந்துக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். தேர்தல் காலகட்டத்தில் ஆளும் கட்சிக்கே அதிகாரிகள் சாதகமாக உள்ளனர். எனவே குற்றசாட்டுகள் இல்லாத அதிகாரிகளை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளாக நியமிக்க வேண்டும்.
எல்லா செலவுகளுக்கும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளையும், விதிகளையும் வகுத்துள்ளது. அதைவிட முழுக்க முழுக்க ஒவ்வொரு செலவையும் தேர்தல் ஆணையமே செய்ய வேண்டும். இதனால் தேர்தல் முறைகேடுகள் குறையும்.
‘பூத் சிலிப்’பை இரண்டு நாட்களுக்கு முன்பாக அல்லாமல் ஒருவாரத்துக்கு முன்பே மக்களிடம் கொடுத்துவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
அங்கீகாரம் ரத்து
பகுஜன் சமாஜ் கட்சி:- ஓட்டுக்கு பணம் வாங்குவதையும் குற்றம் என்று கருதி, அவர்கள் செலுத்தும் வாக்குகளையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். தேர்தல்களை முன்வைத்து சாதி மோதல்களை சாதி அடிப்படையிலான கட்சிகள் உருவாக்குகின்றன. அதன்மூலம் அவர்கள் சாதி ஓட்டுகளை அதிகரித்துக்கொள்கின்றனர். எனவே அப்படிப்பட்ட கட்சிகளின் தலைவர்கள், அவர்களின் உறவினர்கள் போட்டியிடும் பகுதிகளில், மற்ற சாதியினர் வாக்களிக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது.
இந்த தேர்தலில் தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் இதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சினைக்குரிய இடங்களில் வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் பாதுகாப்பளிப்பது போதாது. மற்ற சாதி மக்கள் வாழும் பகுதிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
வாக்களிக்க வெளியே வரக்கூடாது என்ற அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளில் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும். தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்வதோடு, அந்த கட்சிகள் ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் பங்கேற்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களையும் தகுதி இழப்பு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கட்சிகளின் பிரதிநிதிகள் கூறினார்கள்.
‘நோட்டா’ பொத்தான்
‘நோட்டா’ பொத்தான் (யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை) குறித்து ஆலோசனை கூட்டத்தில் கருத்து கூறப்பட்டது. குறிப்பிட்ட வாக்காளருக்கு எதிராக அவருக்கு எதிர் சாதியினர் அனைவரும் சேர்ந்து ‘நோட்டா’ பொத்தானை அழுத்திவிட வாய்ப்புள்ளது என்பதையும் தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு சிலர் கொண்டு வந்தனர்.
Category: மாநில செய்தி


0 comments