பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் ரூ. 1 கோடி வரை கடன் வசதி!
பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ. 25 லட்சம் மானியத்துடன் ரூ. 1 கோடி வரை கடன் வசதி அளிக்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களின் மூலம் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை கடன் வசதியும், ரூ. 25 லட்சம் வரை மானியமும் பெற வாய்ப்புள்ளது. இளம் தொழில் முனைவோர், இந்த திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிகழாண்டில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் வட்டார அளவிலான ஊக்குவிப்பு முகாம், நேர்காணல் நடத்தப்பட்டது.
அதில் 89 பயனாளிகளுக்கு வங்கிகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ. 1 கோடியே 41 லட்சத்து 65 ஆயிரத்தில் ரூ. 21.24 லட்சம் மானிய உதவியுடன் அவர்கள் தொழில் தொடங்க உள்ளனர்.
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 47 பேரில் 18 பயனாளிகளுக்கு வங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ. 97.14 லட்சம் திட்ட மதிப்பீட்டில், ரூ. 28 லட்சத்து 14 ஆயிரம் மானிய உதவியுடன் தொழில் தொடங்க உள்ளனர். புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு வங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ. 3 கோடியே 95 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ. 77 லட்சத்து 52 ஆயிரம் மானிய உதவியுடன் தொழில் தொடங்க உள்ளனர் என்றார் அவர்.
Category: மாவட்ட செய்தி


0 comments