சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடம் ரூ.1½ கோடிக்கு ஏலம் போனது!
சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை மலேசிய நிறுவனம் ரூ.1 கோடியே 54 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
வாகனங்கள் நிறுத்தும் இடம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தை மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த 2012–2013–ம் ஆண்டு ரூ.1 கோடியே 21 லட்சத்துக்கு ஏலம் எடுத்து இருந்தது. இந்த ஏல ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தும் வரை சில மாதங்களுக்கு மும்பை நிறுவனத்துக்கு காலக்கெடு நீட்டித்து வழங்கப்பட்டது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு டெண்டர் மூலம் விமான நிலைய ஆணையகம் ஒப்பந்தம் கோரியது. அதற்கு குறைந்தபட்ச தொகையாக ரூ.1 கோடியே 47 லட்சத்தை நிர்ணயம் செய்தது. ஆனால் உள்நாட்டில் இருந்து யாரும் ஒப்பந்தம் கோர முன்வரவில்லை. இதனால் சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரியது.
மலேசிய நிறுவனம் ஒப்பந்தம்
இதில் மலேசியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் மட்டும் ரூ.1 கோடியே 54 லட்சத்திற்கு ஒப்பந்தம் கோரியது. 3 முறையும் ஒரே நிறுவனம் மட்டும் ஏலத்தில் பங்கேற்றதால் மீண்டும் ஒப்பந்தம் கோரப்பட்டது. ஆனால் அப்போதும் மலேசியாவை சேர்ந்த அந்த நிறுவனத்தை தவிர வேறு யாரும் ஒப்பந்தம் கோரவில்லை. இதனால் மலேசிய நிறுவனத்துக்கே சென்னை விமான நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடத்துக்கான ஒப்பந்தத்தை வழங்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் வந்து செல்ல கட்டணம் இல்லா நேரமாக 7 நிமிடங்கள் வரை அனுமதிக்கப்பட்டது. இந்த காலநேரம் போதாது, அதை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 10 நிமிடங்களாக மாற்றப்பட்டு உள்ளது. புதிதாக ஏலம் எடுத்து உள்ள மலேசிய நிறுவனம் வருகிற ஜனவரி மாதம் முதல் இந்த வாகன நிறுத்தும் இடத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும். அப்போது கட்டணமில்லா நேரம் 10 நிமிடமாக அமல்படுத்தப்படும்.
10 நிமிடங்களில் இருந்து 4 மணி நேரம் வரை நிறுத்தப்படும் கார் போன்ற வாகனங்களுக்கு ரூ.135 கட்டணம் என்றும், பஸ் போன்ற வாகனங்களுக்கு ரூ.225 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பொது நிறுத்தும் இடங்கள்
விமான நிலையம் வரும் 2 சக்கர வாகனங்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. ஆனால் அவற்றை வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தினால் 4 மணி நேரத்திற்கு ரூ.17 என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையங்களில் 60 சதவீதம் பொது வாகன நிறுத்தும் இடங்களாகவும், 40 சதவீதம் அதிக கட்டணங்கள் கொண்ட பகுதியாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் குறைந்த கட்டணங்கள் கொண்ட பொது வாகன நிறுத்தும் இடங்கள் எதுவும் இல்லை என்றும், 100 சதவீதமும் அதிக கட்டணங்கள் கொண்ட பகுதியாக இருக்கின்றன எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையத்தில் பொது வாகன நிறுத்தும் இடங்களை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Category: மாநில செய்தி


0 comments