பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுத்து சட்டம்-ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை புதிய போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா பேட்டி!
பெரம்பலூர், -
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுத்து சட்டம்-ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா தெரிவித்தார்.
காலியாக இருந்தது
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெ.மகேஷ் தேனிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பணி இடம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நிரப்பப்படாமலேயே இருந்துவந்தது.
பெரம்பலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு ஆக சோனல் சந்திராவை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது.
பதவி ஏற்றார்
இதனைத்தொடர்ந்து சோனல் சந்திரா புதிய போலீஸ் சூப்பிரண்டு ஆக நேற்று பதவி ஏற்றார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சோனல் சந்திரா, புதுடெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. எம்.பி.எல். (சமூகவியல்) மற்றும் பி.எச்.டி. முடித்துவிட்டு 2007-08-ம் ஆண்டில் லக்னோ இசபெல்லா தோபர்ன் மகளிர் (ஐ.டி.)கல்லூரியில் சமூகவியல் உதவி பேராசிரியராக பணி புரிந்துள்ளார்.
2008-ல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, தூத்துக்குடி உதவி சூப்பிரண்டாக பதவி ஏற்றார். அங்கு ஒரு ஆண்டு 7 மாதம் பயிற்சிக்கு பிறகு சென்னை மேற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணிபுரிந்தார். பின்பு அங்கிருந்து சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு பிரிவு துணை கமிஷனராக பணிபுரிந்து, பெரம்பலூருக்கு பணிமாற்றலாகி வந்துள்ளார்.
சோனல் சந்திராவின் கணவர் ராஜசேகர், சென்னை லயோலா கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணி புரிந்துவருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
சட்டம்-ஒழுங்கு
பதவி ஏற்றபிறகு அதிகாரி சோனல்சந்திரா நிருபர்களிடம் கூறும்போது பெரம்பலூர் மாவட்டம் சிறிய மாவட்டமாக இருந்தாலும், முழுகவனம் செலுத்தப்படும், சட்டம் ஒழுங்கை நல்லமுறையில் பராமரிக்கவும், குற்றச் செயல்களை தடுக்கவும், விபத்துக்களை தடுத்து அதனால் நிகழும் உயிரிழப்புகளை குறைக்கவும் முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிவித்தார்.
புதிய போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திராவிற்கு பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுந்தர்ராஜன் (மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவு) தனிப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால சந்திரன், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர் புதீன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள், மாவட்ட போலீஸ் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சோனல்சந்திரா திருச்சி போலீஸ் ஐ.ஜி. ராமசுப்ரமணியன், டி.ஐ.ஜி. அமல்ராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்துபெற்றார்.
துணை சூப்பிரண்டு பதவிஏற்பு
பெரம்பலூர் டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டாக இதுவரை பணிபுரிந்து வந்த சுகாசினி சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பெரம்பலூர் மாவட்ட நில மோசடிப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுருளியாண்டி பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி ஏற்றார்.
Category: மாவட்ட செய்தி


0 comments