'எலக்ட்ரானிக் எப்.ஐ.ஆர்., முறை: மாநிலம் முழுவதும் அடுத்த ஆண்டு அமல்'!
ஈரோடு: தமிழகத்தில், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், அடுத்த ஆண்டு, ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்துக்குள், எலக்ட்ரானிக் முறையில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, "பிரின்ட் அவுட்' வழங்கும் முறை அமலாக உள்ளது,'' என, மாநில குற்ற ஆவண பதிவேடுகள் காப்பக, ஏ.டி.ஜி.பி., ஆசிஸ் பெங்கரா கூறினார்.
தமிழகம் முழுவதும், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், தேசிய அளவிலான, "குற்றம் மற்றும் குற்ற பின்னணி கண்டறியும் வலைப்பின்னல்' திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில், இத்திட்டம், ஆக., 19ல், அமலாகி, புகார்தாரர்களுக்கு, புகார் ஏற்பு மனு சான்றிதழ், கம்ப்யூட்டர் மூலம் வழங்கப்படுகிறது. ஈரோடு டவுன் ஸ்டேஷனில், இத்திட்டம் செயல்பாடு குறித்து, நேற்று, ஏ.டி.ஜி.பி., ஆசிஸ் பெங்கரா ஆய்வு செய்தார். இத்திட்டத்துக்காக, ஸ்டேஷன்களில், கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும் மோடம், இணையதள வசதி, உபகரணங்கள், காற்றோட்ட வசதி, போலீசார் கையாளும் முறை ஆகியவற்றை, ஆய்வு செய்தார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும், "சிப்ரஸ்' என்ற, சாப்ட்வேர் மூலம், ஸ்டேஷனில் பதிவாகும் அனைத்து புகார்களும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், அனைத்து ஸ்டேஷன்களிலும், இது, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2002 முதல், 2012 வரை, அனைத்து வழக்குகளும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 2014 ஜன., அல்லது பிப்., மாதத்துக்குள், எலக்ட்ரானிக் எப்.ஐ.ஆர்., முறையில் வழக்கு பதிவாகி, பொதுமக்களுக்கு எப்.ஐ.ஆர்., நகல்கள், பிரின்ட் அவுட்டாக வழங்கப்படும். இதற்காக, அரசின் ஒப்புதல் இன்னும் பெறவில்லை. அரசாணை வந்ததும் நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்துக்காக, பணியமர்த்தப்பட்ட போலீசாரை வேறு பணிக்கு அனுப்பக்கூடாது. தமிழக சிறப்பு இளைஞர் காவல் படைக்கான ஆள்தேர்வு முடிந்து, அதில் தேர்வு செய்யப்படுவோர், இத்திட்டத்துக்காக, பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Category: மாநில செய்தி


0 comments