சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது!
சென்னை, நவ. 15–
புதுப்பிக்கப்பட்ட சென்னை விமான நிலையம் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் நவீனமயம் ஆக்கப்பட்ட சென்னை விமான நிலைய கட்டிடத்தில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இங்குள்ள புதிய கூரை அடிக்கடி பெயர்ந்து விழுகிறது.
இது வரை 8 முறை விமான நிலைய கூரை இடிந்துள்ளது. இப்போது 9–வது சம்பவமாக முக்கிய பிரமுகர்கள் செல்லும் வாசலில் உள்ள கண்ணாடி கதவு உடைந்து விழுந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:–
சென்னை புதிய உள்நாட்டு விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் செல்வதற்காக சிறப்பு வழி உள்ளது. இதற்கான வாசலில் 12 அடி உயரம் 6 அடி அகலம் கொண்ட கண்ணாடி கதவு பொருத்தப்பட்டிருந்தது.
நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் இந்த கண்ணாடி கதவு திடீர் என்று உடைந்து விழுந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால், பெரும் பாதிப்பு எதுவும் இல்லை.
தகவல் அறிந்ததும் ஊழியர்கள் விரைந்து சென்று உடைந்த கண்ணாடி கதவை அகற்றினார்கள். அதிகாரிகள் யாரும் அங்கு சென்று பார்க்க வில்லை. மாற்று கதவும் பொருத்த வில்லை. கதவு இல்லாமல் வாசல் திறந்து கிடப்பதால் ஏ.சி வீணாகிறது என்று விமான பயணிகள் கருத்து தெரிவித்தனர்.
Category: மாநில செய்தி


0 comments