பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு மாதிரி பொதுத் தேர்வாக நடைபெறும்!
பெரம்பலூர்,நவ,30:
பெரம்பலூர் மாவட்டத்தில் அரையாண்டுத் தேர்வெழுதும் எஸ்எஸ்எல்சி, பிளஸ்&2 மாணவ,மாணவியருக்கு மாதிரி பொதுத்தேர்வு நடத்த கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
பொதுவாக அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 ம்வகுப்பு, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பள்ளியை மதிப்பீடு செய்யும் என்பதால் அவர்களுக்கான அரசுப் போதுத்தேர்வுக்காக ஆண்டுமுழுவதும் பள்ளி நிர்வாகமும், கல்வித் துறையும் முழுவீச்சில் அக்கறை காட்டி செயல் படும். இதில் எவ்வளவு முயன்றாலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளால் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடிவதில்லை. எனவே அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தை மாற்றி அமைத்திடும் வகையில் மாதிரி பொதுத்தேர்வு நடத்த பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் தரேஸ்அஹமது திட்ட மிட்டு அதற்கான உத்தரவை கல்வித் துறைக்கு பிறப்பித்துள்ளார்.
இதற்காக டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வையே மாதிரி பொதுத்தேர்வை போல நடத்த உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் 79 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவ, மாணவியர் 5,230 பேர்களும், 35 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 3,461 பேரும் அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். இவர்களில் பிளஸ்&2 மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 10ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரையி லும்,10ம் வகுப்புக்கு டிசம்பர் 12ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரையிலும் அரையாண்டுத் தேர்வு நடைபெறவுள்ளது.
இந்தத்தேர்வு மாதிரி பொதுத்தேர்வு போல நடத்த வினாத்தாள்களுக் கான விடைக்குறிப்பை தயாரிக்க சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ்&2 விடைத்தாள்களை பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களை குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் திருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடைத்தாள்களுக்கு டம்மி நம்பர் எனப்படும் மாற்றுஎண் வழங்கப்பட்டு 4 நாட்களில் திருத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாணவர்களுக்கு அரசுத் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கிடவும், காலங் தாழ்த்தாமல் விடைத்தாள்களை சீக்கிரம் திருத்திவழங்கவும், அதன் முடிவுகளுக் கேற்ப பொதுத்தேர்வுக்கு முன்னதாக மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி அளித்திடவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Category: மாவட்ட செய்தி


0 comments