சர்க்கரை நோயாளிக்கு அரசு பொது மருத்துவமனையில் குறைந்த விலையில் இன்சுலின் அடுத்த மாதம் முதல் விற்பனை!
சென்னை, நவ.24:
அரசு பொது மருத்துவமனையில் குறைந்த விலையில் இன்சுலின் மருந்து விற்பனை டிசம்பரில் தொடங்கும் என்று டீன் தெரிவித்தார்.
தமிழகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு புண்கள் எளிதில் ஆறுவதில்லை. இதனால் உறுப்புகளை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. மாத்திரையால் கட்டுப்படுத்த முடியாதபோது, சர்க்கரை அளவை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர இன்சுலின் ஊசிகள் போடப்படுகின்றன. இந்த இன்சுலின் ஊசிகளின் விலை அதிகம். தனியார் ஆஸ்பத்திரிகள், மருந்தகங்களில் அதிக விலை கொடுத்து இன்சுலின் போடவேண்டிய நிலமை உள்ளது. இதனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் பாதிப்படைகின்றனர். இந்நிலையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் குறைந்த விலையில் இன்சுலின் ஊசி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை கூறியதாவது:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அதிக விலை கொடுத்து இன்சுலின் மருந்து வாங்கமுடியாமல் தவிக்கும் ஏழைகளுக்காக, இங்கு குறைந்த விலையில் இன்சுலின் மருந்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கழகம் சார்பில் 4 வகையான இன்சுலின் விற்பனை செய்யப்படும். தனியார் ஆஸ்பத்திரிகள், மருந்தகங்களை விட இங்கு மூன்றில் ஒரு பங்கு விலையில் விற்பனை செய்யப்படும்.
தனியார் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு இங்கு குறைந்த விலையில் மாத்திரை, மருந்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் இதன் விற்பனை தொடங்கும். மற்ற அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் குறைந்த விலையில் இன்சுலின், சிறுநீரக மாத்திரைகள் விரைவில் விற்பனை செய்யப்படும்.
Category: மருத்துவம், மாநில செய்தி


0 comments