இலவசமாக தர வேண்டியதை விலைக்கு விற்பதா? அம்மா குடிநீருக்கு தடை விதிக்க ஐகோர்ட்டில் வழக்கு!
சென்னை, அக்.29:
சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அம்மா குடிநீர் என்ற பெயரில் குடிநீரை 10 ரூபாய்க்கு அரசு விற்பனை செய்கிறது. இது மிகவும் தவறானது. குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாகத்தான் அரசு விநியோகிக்க வேண்டும். மக்கள் அரசுக்கு வரி செலுத்துகிறார்கள். பல இடங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு குறைந்த மணி நேரமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த நேரத்திலும் முழுமையாக குடிநீர் கிடைப்பதில்லை.
இந்த சூழ்நிலையில், தமிழக அரசே குடிநீரை விற்பது முறையற்றது. அம்மா குடிநீரை, போக்குவரத்து கழகங்கள் சாலையோரத்தில் பங்க் அமைத்து விற்பனை செய்கிறார்கள். குடிநீர் பாட்டில்களில் முதல்வர் படத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் பொறித்துள்ளார்கள். இதுவும் தவறானது. வேண்டுமானால், முதல்வர் குடிநீர் என்று குறிப்பிடலாம். அம்மா என்ற பெயரில் போட்டது தவறானது. எனவே, அம்மா குடிநீர் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். இதுபோல அம்மா உணவகம் என்று பெயர் வைத்துள்ளனர். இதுவும் தவறானது. அம்மா என்ற பெயரை நீக்க வேண்டும். இதற்கும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
Category: மாநில செய்தி


0 comments