தமிழகத்தில் 5.14 கோடி வாக்காளர்கள்: மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
முந்தைய பட்டியல்
தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
1.1.14 தேதியை தகுதியை ஏற்படுத்தும் நாளாக கருத்தில் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறை திருத்ததம் செய்யப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 1.10.13 அன்று நிர்ணயிக்கப்பட்ட இடங்களிலும் (பெரும்பாலும் பள்ளிக் கட்டிடங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள்), அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
http://elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலின் நகல் வழங்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத்திருத்தம் 2013–ன்படி, 10.01.13 அன்று இறுதிப்பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அன்றைய கணக்கின்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.16 கோடியாகும். (ஆண்கள் 2.58 கோடி, பெண்கள் 2.57 கோடி மற்றும் இதரர் 2 ஆயிரத்து 434 பேர்).
வாக்காளர் சதவீதம் 69
அதன்பின்னர், 11.1.13 முதல் 30.9.13 வரையிலான திருத்த காலத்தில் 2.40 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. (அதில், ஆண்கள் 1.20 லட்சம்; பெண்கள் 1.20 லட்சம் மற்றும் இதரர் 40 பேர்). இறப்பு, இடம் பெயர்வு மற்றும் இருமுறை பதிவு போன்ற காரணங்களுக்காக 4 லட்சத்து 10 ஆயிரம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. (ஆண்கள் 2 லட்சத்து 4 ஆயிரம், பெண்கள் 2 லட்சத்து 6ஆயிரம் மற்றும் இதரர் 53 பேர்).
அதைத் தொடர்ந்து 1.10.13 (நேற்று) வெளியிடப்பட்ட சிறப்பு சுருக்க முறை திருத்தம்–2014–ன் வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழ்நாட்டில் தற்போது 5.14 கோடி வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 58 லட்சம்; பெண் வாக்காளர்கள் 2 கோடியே 56 லட்சம் மற்றும் இதரர் 2 ஆயிரத்து 421) பதிவு செய்யப்பட்டுள்ளனர். மக்கள் தொகை பாலின விகிதமான 995 (ஆயிரம் ஆண்களுக்கு) உடன் ஒப்பிடும்போது, வாக்காளர் பட்டியல் பாலின விகிதம் 994 ஆகும். மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது வாக்காளர் விகிதம் 69 சதவீதமாக உள்ளது.
சிறப்பு முகாம்கள்
2.10.13 மற்றும் 5.10.13 ஆகிய நாட்களில் கிராம சபை/உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகம்/பிரிவு ஆகியவை படிக்கப்பட்டு, பெயர்கள் சரிபார்க்கப்படும். 6.10.13, 20.10.13 மற்றும் 27.10.13 ஆகிய ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் வாக்குச்சாவடிகள்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தல்/இடம் மாற்றுதல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அங்கே கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை/வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம்/ஓட்டுனர் உரிமம்/கடவுச்சீட்டு/தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றின் சமீபத்திய ரசீது/ஆதார் கடிதம் போன்றவற்றை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம்.
வயது சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது பள்ளிச்சான்றிதழின் நகல் அளிக்கப்படலாம். 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள், வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். http:// www.elections.tn.gov.in /eregistration என்ற இணையதள முகவரியிலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அடையாள அட்டைக்கும் விண்ணப்பிக்கலாம்
1.1.14 அன்று 18 வயது நிறைவடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்கலாம். முதன்முறையாக விண்ணப்பிப்போரை (அதாவது, 18–24 வயதிலுள்ள மனுதாரர்கள்) தவிர, மற்ற மனுதாரர்கள் அனைவரும் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணையும் படிவத்தில் குறிப்பிடவேண்டும். இருப்பிட மாற்றம் செய்யாமல் இருந்தாலும்கூட, தற்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவையும், முன்னர் பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்க இயலவில்லை என்றும் (அல்லது) தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர்கள், படிவம் 6–ல் பாகம் 4–ஐ பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்து, ஆனால் அவருடைய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால், வட்டாட்சியர்/மண்டல அலுவலகத்தில் படிவம் 001–ல் எப்போதும் விண்ணப்பிக்கலாம்.
வெளிநாட்டு இந்தியர்
வெளிநாட்டில் வாழும் இந்தியரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்படவேண்டும். அல்லது, வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்படும்போது அதனுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், மற்ற விவரங்களுடன் விசாவின் செல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட்டின் தொடர்புடைய பக்கங்களின் போட்டோ நலையும் சேர்த்து அளிக்கவேண்டும்.
வாக்காளர் பதிவு அதிகாரி, மூல பாஸ்போர்ட்டினை ஒப்பிட்டு சரிபார்த்து அப்போதே திரும்பக் கொடுத்துவிடுவார். படிவம் 6ஏ தபாலில் அனுப்பப்படும்போது, பாஸ்போர்ட்டின் போட்டோநகல் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்படவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
பெரம்பலூர் மாவட்டத்தில் 4.83 லட்சம் வாக்காளர்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 4,83,584 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஆட்சியர் மேலும் கூறியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 4,83,584 வாக்காளர்களில் 2,39,384 ஆண்களும், 2,44,183 பெண்களும், இதர வாக்காளர்களாக 17 பேரும் உள்ளனர்.
இதில், பெரம்பலூர் தொகுதியில் 1,23,041 ஆண்களும், 1,27,094 பெண்களும், 8 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,50,143 வாக்காளர்கள் உள்ளனர். குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,16,343 ஆண்களும், 1,17,089 பெண்களும், 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,33,441 பேர் உள்ளனர்.
1.1.2014-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிறைவடைந்தவர்களும், இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்ப்பதற்கும், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது பெயரை திருத்த, நீக்க, பாகம் மாற்றச் செய்ய 1.10.2013 முதல் 31.10.2013 வரை விண்ணப்பிக்கலாம். பெயர்களைச் சேர்க்க படிவம் 6, நீக்குவதற்கு படிவம் 7, திருத்தம் மேற்கொள்ள படிவம் 8, பாகம் மாற்ற படிவம் 8- ஏ ஆகியவற்றை நிறைவு செய்து, வாக்குச்சாவடி மையங்களில் உள்ள நிலைய அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், சம்பந்தப்பட்ட கிராமங்களில் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி நியமன அலுவலர்களிடம் உரிய படிவங்களை பெற்று, புகைப்படம் மற்றும் உரிய ஆதாரங்களுடன் அக். 6, 20, 27 ஆகிய விடுமுறை நாள்களில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் காலை 9.30 மணி முதல், மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர்.
மாநில வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் மா. ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன், ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.பி. மருதராஜா, நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், வருவாய்க் கோட்டாட்சியர் ப. புஷ்பமாரியம்மாள், நகராட்சி ஆணையர் போ. குருசாமி உள்பட வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Category: மாநில செய்தி, மாவட்ட செய்தி

0 comments