அடுத்த ஐந்து மாதங்களில் 25,000 ஏ.டி.எம். மையங்கள் பாரத ஸ்டேட் வங்கி திட்டம்!
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பீ.ஐ) அடுத்த ஐந்து மாதங்களில் நாடு முழுவதுமாக கூடுதலாக சுமார் 25,000 ஏ.டி.எம். மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது எஸ்.பீ.ஐ. மற்றும் அதன் ஐந்து துணை வங்கிகளும் மொத்தம் 38,779 ஏ.டி.எம். மையங்களை கொண்டுள்ளன.
இலக்கு நிர்ணயம்
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள் பெரிய அளவில் ஏ.டி.எம். நெட்வொர்க்கை கொண்டுள்ளன. இந்நிலையில், அடுத்த ஐந்து மாதங்களில் ஏ.டி.எம். மொத்த எண்ணிக்கையை 65,000-ஆக அதிகரிக்க இவ்வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், 7,800 ஏ.டி.எம்.களை சொந்தமாகவும், 17,200 ஏ.டி.எம்.களை மூன்றாம் நபர் நிர்வாக அடிப்படையில் பிரவுன் - லேபிள் ஏ.டி.எம்.களை அமைக்க முடிவு செய்துள்ளதாக இவ்வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாரத ஸ்டேட் வங்கியின் 7,800 ஏ.டி.எம்.களை அமைக்க, நிர்வகிக்க மற்றும் பராமரிப்பு சேவைக்கான ஒப்பந்தம் ஐ.டி. நிறுவனமான சி.எம்.எஸ். இன்போ சிஸ்டம்ஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ஏறக்குறைய ரூ.260 கோடியாகும். பிரவுன் லேபிள் ஏ.டி.எம்.கள் பெரும்பாலும் ஊரகப் பகுதிகளிலும், நடுத்தர நகரங்களிலும் அமைக்கப்படுகின்றன.
2012 மார்ச் நிலவரப்படி பொதுத் துறை வங்கிகளின் 33,700 கிளைகளில் ஏ.டி.எம். வசதி கிடையாது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது பட்ஜெட் உரையின்போது அனைத்து பொதுத் துறை வங்கிகளும் அதன் கிளைகளில் ஏ.டி.எம். மையங்களை திறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
பணிச்சுமை குறையும்
வங்கி வளாகத்தில் ஏ.டி.எம். மையம் வைப்பதால் வங்கிப் பணியாளர்களின் பணிச்சுமை குறையும். கூட்டம் குறைவதால் இதர சேவைகளில் அவர்கள் அதிக கவனம் செலுத்த முடியும்.வங்கிகள் தனது கிளையில் மட்டும் இல்லாமல் பல்வேறு பொது இடங்களிலும் ஏ.டி.எம். வசதியை ஏற்படுத்துவதால் காலதாமதம், அலைச்சல் போன்ற இடர்பாடுகள் நீங்குகின்றன.
Category: மாநில செய்தி


0 comments