தமிழகத்தில் 1.74 லட்சம் சிறுபான்மை இன மாணவ, மாணவிகளுக்கு விரைவில் ரூ. 55.21 கோடி கல்வி உதவித் தொகை!
1.74 லட்சம் சிறுபான்மை இன மாணவ, மாணவிகளுக்கு விரைவில் ரூ. 55.21 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது என்றார் தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணைய தலைவர் பேராயர் எம். பிரகாஷ்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினர் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
தமிழக அரசு சிறுபான்மை இன மக்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளைப் பெரும்பான்மையினருக்கு நிகராக மேம்பாடு செய்யும் நோக்கிலும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் நலனுக்கென தமிழக முதல்வர் பல்வேறு அரசு நலத் திட்டங்களை வேறு எந்த மாநில முதல்வரும் செய்யாத வகையில் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
கிறிஸ்துவ சமுதாய மக்கள் ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கு உதவி செய்யும் விதமாக ஆண்டுதோறும் 500 பேருக்கு அரசு ரூ. 20,000 வீதம் ஒதுக்கீடு செய்கிறது.
ரம்ஜான் நாட்களில் இஸ்லாமியர்கள் நோம்பு கஞ்சி தயாரிப்பதற்காக சுமார் 4,000 டன் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இஸ்லாமிய மக்கள் புனித பயணம் மேற்கொள்வதற்கு வழங்கப்பட்டு வந்த பயணச் செலவுக்கான மானியத் தொகை ரூ. 20,000-லிருந்து ரூ. 30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பல்வேறு கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 2012 – 13 ஆம் கல்வியாண்டில் 1.91 லட்சம் கிறிஸ்துவர்களுக்கும், 1.01 லட்சம் இஸ்லாமியர்களுக்கும், 2 சீக்கியர்களுக்கும், 12 புத்த மதத்தினருக்கும், 3 பார்சி இனத்தவர்களுக்கும் என மொத்தம் 3.87 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 82.26 கோடி வழங்கப்பட்டது. 2013 – 14 ஆம் கல்வியாண்டில் 83,315 கிறிஸ்தவர்களுக்கும், 90,828 இஸ்லாமியர்களுக்கும், 228 சீக்கியர்களுக்கும், 228 புத்த மதத்தினருக்கும், 20 பார்சி இனத்தவர்களுக்கும் என மொத்தம் 1.74 லட்ச மாணவ, மாணவிகளுக்கு ரூ. 55.21 கோடி வழங்கப்படவுள்ளது என்றார் பிரகாஷ்.
பின்னர், 34 பயனாளிகளுக்கு ரூ. 23.17 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன், மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமார், மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ், யு. சுதீர்லோதா, கே. கலாமணி, சர்தார் மன்ஜித்சிங் நாயர், ஆர். சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Category: மாநில செய்தி


0 comments