பெரம்பலூரில் தொடர் திருட்டு : போலீஸார் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகம்
பெரம்பலூர் நகரில் குற்றச் சம்பவங்கள் தொடர்வதையடுத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை போலீஸார் சனிக்கிழமை வழங்கினர்.
பெரம்பலூர் நகரில் அண்மைக்காலமாக வீடுகளில் கொள்ளையடிப்பது, மோட்டார் சைக்கிளில் சென்று நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதையடுத்து இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்காக இரவு நேர ரோந்துப்பணி, வாகன தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே பெரம்பலூர் நகர பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீஸாரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டும் வருகின்றன.
பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் சர்புதீன் தலைமையிலான போலீஸார், பெரம்பலூர் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சனிக்கிழமை சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
அதில் அறிமுகம் இல்லாத நபர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிவது தெரிந்தால் போலீஸாருக்குத் தெரியப்படுத்த வேண்டும். வெளியூர் செல்லும்போது பணம், நகைகளை வீட்டில் வைத்துவிட்டு செல்லக் கூடாது, தங்களது வீடுகளுக்கு அருகே சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது தெரிந்தாலோ, வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றாலோ 04328- 224910, 277120, 224561, பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் 9865333336 உள்ளிட்ட எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
Category: மாவட்ட செய்தி


0 comments