உண்மை கண்டறியும் சோதனைக்கு ராசா மறுப்பு
2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டபோது உண்மை கண்டறியும் சோதனை நடத்த அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்று விசாரணை அதிகாரி சாட்சியம் அளித்தார்.
இது தொடர்பாக அலைக்கற்றை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் சிபிஐ துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் சஹால் புதன்கிழமை ஆஜரானார்.
அப்போது அவரிடம் சிபிஐ வழக்குரைஞர் கே.கே. கோயல் சில ஆவணங்களைக் காண்பித்து பதில்களைக் கோரினார். அதில் ஒரு ஆவணத்தில் ராசாவிடம் விசாரணை நடத்த அவரது அனுமதி கோரிய குறிப்பில் ராஜேஷ் சஹால் கையெழுத்திட்டிருந்தார்.
அந்த ஆவணம் நினைவிருக்கிறதா என்று சிபிஐ வழக்குரைஞர் கேள்வி எழுப்பினார். அதற்கு ராஜேஷ் சஹால் அளித்த பதில்:
"2010-ஆம் ஆண்டு முதல் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரிக்கும் பொறுப்பை எனக்கு முதன்மை விசாரணை அதிகாரியான விவேக் பிரியதர்ஷி வழங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி ராசா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சிபிஐ காவலில் அவர் பிப்ரவரி 17-ஆம் தேதிவரை இருந்தார். அதே ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி ராசாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு அவரது ஒப்புதல் பெறும் குறிப்பை நான் தயாரித்தேன். ஆனால், அந்த சோதனைக்கு உடன்பட ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று அந்தக் குறிப்பில் ராசா குறிப்பிட்டுக் கையெழுத்திட்டார்' என்று ராஜேஷ் சஹால் கூறினார். இதைத் தொடர்ந்து அவரது சாட்சியத்தை வியாழக்கிழமை தொடர்ந்து பதிவு செய்ய நீதிபதி ஓ.பி. சைனி அனுமதி வழங்கினார்.
Category: மாநில செய்தி
0 comments