பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்!
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்கள் வட்டார அளவில் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை, மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் நடைபெறும் விழிப்புணர்வு முகாம் அக். 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அக். 1-ம் தேதி வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு திட்ட விளக்க முகாமும், மதியம் 2.30 மணிக்கு நேர்காணலும், அக். 3-ம் தேதி வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு திட்ட விளக்க முகாமும், மதியம் 2.30 மணிக்கு நேர்காணலும் நடைபெற உள்ளது.
அக். 4-ம் தேதி ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு திட்ட விளக்க முகாமும், மதியம் 2.30 மணிக்கு நேர்காணலும், 8ம் தேதி பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு திட்ட விளக்க முகாமும், மதியம் 2.30 மணிக்கு நேர்காணலும் நடைபெற உள்ளது. முகாம்களில் கலந்து கொள்ள விரும்புவோர் குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 35 வயதிற்குள்பட்டவராகவும், சிறப்பு பிரிவினர் 18 வயது முதல் 45 வயதிற்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு ரூ. 1.50 லட்சத்திற்கு மிகாமலும், தற்போது வசிக்கும் இடத்தில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பராக இருக்க வேண்டும். எந்த ஒரு திட்டத்திலும் மானியத்துடன் கடன் பெற்றவராக இருக்கக்கூடாது.
விழிப்புணர்வு முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழின் அசல் மற்றும் 2 நகல்கள், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச்சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், திட்ட அறிக்கை இரண்டு நகல்கள், டின் நம்பர் உள்ள விலைப்பட்டியல் அசல் மற்றும் இரண்டு நகல்கள், 2 பாஸ்போட் அளவு புகைப்படம், சாதிச்சான்று அசல் மற்றும் 2 நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுவர வேண்டும். நேர்காணலில் தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சேவை வங்கிக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். இந்த வாய்பை இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
Category: மாவட்ட செய்தி


0 comments