ரயில்வேயில் ரூ. 17,000 கோடி ஊழல்: அம்பலப்படுத்தியது சி.ஏ.ஜி!!
புதுடெல்லி,
இரும்பு கனிமங்களை சரக்கு ரெயில்களில் கொண்டு செல்வதில் ஏற்றுமதியாளர்கள் செய்த முறைகேட்டால், ரெயில்வே துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த தகவல் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ரூ.17 ஆயிரம் கோடி ஊழல்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி நிலக்கரி சுரங்க அனுமதி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள், மத்திய தலைமை கணக்கு அதிகாரி அறிக்கைகள் மூலம் ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்டு உள்ளன.
தற்போது ரெயில்வே துறையிலும், ரூ.17 ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்று இருப்பதை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் அம்பலப்படுத்தி இருக்கிறார். இரும்பு கனிமங்களை சரக்கு ரெயில்களில் கொண்டு செல்வதில், ஏற்றுமதியாளர்கள் ரெயில்வே துறை உயர் அதிகாரிகளுடன் இணைந்து இந்த முறைகேடுகளை செய்துள்ளனர்.
3 மடங்கு கட்டணம்
கடந்த 2008–ம் ஆண்டு மே 22–ந்தேதி அன்று இரும்பு கனிமங்களை சரக்கு ரெயில்களை கொண்டு செல்வதற்கு இரட்டை கட்டண முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, உள்நாட்டு பயன்பாட்டுக்கான கனிமங்களுக்கு உள்ள கட்டணத்தை விட ஏற்றுமதிக்கான கனிமங்களுக்கு 3 மடங்கு அதிக கட்டணம் விதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், ஏற்றுமதியாளர்கள், ரெயில்வே உயர் அதிகாரிகளின் உடந்தையுடன், உள்நாட்டு பயன்பாட்டு கட்டணத்தில் இரும்பு தாதுக்களை ஏற்றிச்சென்றதில், ரெயில்வே துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக, ரெயில்வே அமைச்சகத்துக்கு கணக்கு தணிக்கை அதிகாரி அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பரிசோதனை அடிப்படையில்
பரிசோதனை அடிப்படையில் மொத்தம் உள்ள 75 சரக்கு ஏற்றும் முனையங்களில் 26 முனையங்களிலும், சரக்குகள் இறக்கப்படும் 41 முனையங்களில் 10 முனையங்களில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டு இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரும்பு கனிமங்கள் அதிக அளவில் கையாளப்படும் தென் கிழக்கு, தென் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பிராந்திய ரெயில்வே பகுதிகளில் மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. அனைத்து சரக்கு முனையங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு இருந்தால், இந்த இழப்புத்தொகை ரூ.50 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.
இரும்பு கனிமங்களை கொண்டு சென்ற ஏறத்தாழ 126 நிறுவனங்கள், உள்நாட்டு பயன்பாட்டுக்கான ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யாமலும், மேலும் 290 நிறுவனங்கள், முழுமையான ஆவணங்களை தாக்கல் செய்யாமல் உள்நாட்டு கட்டணத்தில் அனுப்பி இருப்பதும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
Category: மாநில செய்தி


0 comments