மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆண்டு வருமானம் உயர்வு.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தபட்ட மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற, பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் (பொ) எம்.ஏ. சுப்ரமணியன். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு உள்ளிட்ட படிப்புகள் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சமாக இருந்ததை, தமிழக அரசு நிகழாண்டு முதல் ரூ. 2 லட்சமாக உயர்த்தியுள்ளது. எனவே, ரூ. 2 லட்சம் வரை பெற்றோரது ஆண்டு வருமானம் உள்ள மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.6-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை ஆங்கில வழிக்கல்வி பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி, அவர்கள் செலுத்தும் படிப்புக் கட்டணம் ஈடு செய்யப்படுகிறது. உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை, மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை நேரடியாக அல்லது 04328- 224475 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
Category: கல்வி
0 comments