பாஸ்போர்ட் பெற லஞ்சம் கேட்ட காவல்துறை - லஞ்சத்தை அங்கீகரிக்க கோரிக்கை!
அஸ்ஸாம் : அஸ்ஸாமைச் சேர்ந்த முதியவர் முக்ததிர் அலி தலுக்தார் முஸ்லீம்களின் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜுக்குச் செல்வதற்காக பாஸ்போர்ட் வேண்டி இரு முறை விண்ணப்பித்துள்ளார்.
இரு முறையும் அவரது இருப்பிடச் சான்றைச் சரி பார்த்துச் சான்றளிக்க உள்ளூர் காவல்துறையினர் லஞ்சம் கேட்டுள்ளனர். சான்றளிக்க உள்ளூர் காவல்துறையினருக்கு லஞ்சம் தர முக்ததிர் மறுத்ததால் இரு முறையும் அவரது பாஸ்போர்ட் விண்ணப்பம் காவல்நிலையத்தைத் தாண்டிச் செல்லவில்லை.
இரு முறையும் தமது பாஸ்போர்ட் விண்ணப்பம் மீது உள்ளூர் காவல்துறை நடவடிக்கை எடுக்காததை அடுத்து வெறுப்புற்ற முக்ததிர், அஸ்ஸாம் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கோயலிடம் காவல்துறை லஞ்சம் பெறுவதை சட்டமாக்கக் கோரி மனு அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில் ''காவல்துறைக்கு லஞ்சம் அளிக்காமல் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சான்று அளிக்கப்பட்டு அனுப்பப்படுவதில்லை. இதன் காரணமாக காவல்துறைக்கு லஞ்சம் அளிப்பதை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.
பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீதான இருப்பிடச் சான்று சரிபார்ப்பின் போது காவல்துறை லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதால் வருடா வருடம் பலர் பாதிக்கப்பட்டு ஹஜ்ஜுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி கோயலுக்கு மனு அளித்ததை அடுத்து முக்ததிரின் வீட்டுக்கே சென்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.ஆர் சிங், நடைபெற்ற சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன் இனி இது போன்று நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளார்.
Category: மாநில செய்தி
0 comments