இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி! கலைஞர், ஸ்டாலின் பங்கேற்பு!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் புனித ரமலான் நோன்பு திறப்பு இஃப்தார் நிகழ்ச்சி 25.07.2013 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டல் இம்பீரியல் சிராஜ் மஹாலில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:–
ஒற்றுமையாக இருக்க வேண்டும்
தமிழ்நாட்டில் நான் சிறுவனாக இருந்து பார்த்த முஸ்லிம் லீக் இன்று இல்லை. பல பிரிவாக பிரிந்துவிட்டது. இஸ்லாம் சமுதாய பெருமக்கள், முஸ்லிம் லீக் வரலாறு எத்தகையது, எப்படி உருவானது, தலைவர்கள் இந்த சமுதாயத்திற்காக எப்படி பணியாற்றினார்கள் என்பதை எண்ணிப்பார்த்தாவது நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பிறர் நெருங்க அஞ்சுவார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் இருந்து முதல் குரல் எழுப்பியது தி.மு.க.தான். எதையும் நான் மறந்துவிடவில்லை. இஸ்லாம் மக்களுக்காக தொண்டாற்றி வருகிறோம். தொடர்ந்து தொண்டாற்றுவோம்.
தி.மு.க. ஆட்சியில்…
தி.மு.க. ஆட்சியில் இஸ்லாம் மக்களுக்காக பணியாற்றியது குறித்து ஒரு பட்டியலை தெரிவிக்க விரும்புகிறேன். முதலாவதாக மிலாது நபி விடுமுறையை ரத்து செய்ததை தி.மு.க. ஆட்சியில் மீண்டும் கொண்டுவந்தோம். 1983–ம் ஆண்டு உருது பேசும் முஸ்லிம் மக்கள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
அதன்பிறகு, சென்னையில் உள்ள கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் வைத்ததும் தி.மு.க. ஆட்சியில் தான். 1989–ம் ஆண்டு இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் பயன்பெறுவதற்காக சிறுபான்மையினர் நல ஆணையம் தொடங்கப்பட்டது. ஓய்வூதியம் பெரும் உலமாக்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.
குலுக்கல் முறை ரத்து
1999–ம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான குலுக்கல் முறை ரத்து செய்யப்பட்டு, விண்ணப்பிக்கும் அனைவரும் ஹஜ் புனித பயணம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தான். அதே ஆண்டு தமிழக சிறுபான்மை மேம்பாட்டு கழகம் தொடங்கப்பட்டது.
சென்னையில் ரூ.58 லட்சம் செலவில் காயிதே மில்லத் மணி மண்டபம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தான். 2007–ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட 30 சதவீத ஒதுக்கீட்டில் 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 2007–ம் ஆண்டு சிறுபான்மையினர் நலனுக்காக தனி இயக்குனரகம் அமைக்கப்பட்டது.
சிறுபான்மை மக்களுக்கான ஆட்சி
2008–ம் ஆண்டு சீராப்புராணம் பாடிய உமருப் புலவருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டது. 2008–2009–ம் ஆண்டு தமிழக திருமண பதிவு சட்டத்தில், முஸ்லிம் மக்களுடன் விவாதித்து முறையான திருத்தம் தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. சிறுபான்மை மக்களுக்கான ஆட்சி, மைனாரிட்டி மக்களுக்கான ஆட்சி தி.மு.க. என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டு.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் நன்றி கூறினார்.
இறுதியாக மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் நன்றி கூறினார்.
Category: மாநில செய்தி
0 comments