.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

குளிர்பானத்தைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்.

Unknown | 10:23 PM | 0 comments

ஒரு குளிர்பானத்தைக் குடிப்பதற்காக மலை உச்சியில் இருந்து ஹீரோ குதிப்பார், கட்டடங்களைத் தாண்டுவார், வேகமாக வரும் ரயிலை சர்வ சாதாரணமாக கடப்பார். அனைவரையும் ஈர்க்கிறது இப்படி ஒரு விளம்பரம். ஒரு குளிர்பானம்கூட வாங்க முடியாமலா இப்படி ஓடுகிறார் என்று நினைக்கத் தோன்றாமல், தாகம் எடுத்தால், நேராக கார்பனேட்டட் கோலா பானங்கள் பருகத்தான் செல்கின்றோம். குளிர்பானங்கள் குடிக்காதீர்கள் என்றால், 'நான் 'டயட்' கூல் டிரிங்தான் குடிக்கிறேன்' என்று சமாதானப்படுத்திக்கொள்கிறோம்.  சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானத்தில் என்ன சேர்க்கப்படுகிறது, இதைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த டாக்டர் நாகராஜன் விரிவாகப் பேசினார்.
 'குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். இத்தகைய சோடா, டயட் குளிர்பானங்கள் குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய், மாரடைப்பு, எலும்பு அடர்த்தியின்மை என்று ஏராளமான பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இளைஞர்களுக்கு அதிக அளவில் கலோரி அளவை அதிகரிப்பதில் 'ஜங்க்' புட்களைத் தாண்டி எனர்ஜி டிரிங்ஸ் முன்னணியில் இருக்கிறது.'' என்றவர் பாதிப்புகளைப் பட்டியலிட்டார்.
குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.
குளிர்பானத்தில் கலக்கப்படும் காஃபினே தொடர்ந்து இந்த பானத்தை அருந்தத் தூண்டுதலாக (அடிக்ஷன்) உள்ளது. 'டயட்' குளிர்பானத்தில் ஆஸ்பர்டேம் (Aspartame) என்ற வேதிப்பொருள் சர்க்கரைக்குப் பதிலான இனிப்புச் சுவை தருவதற்காகச் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் மூளையில் கட்டி, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும் பதற்றம், மன அழுத்தம், சோர்வு, தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற நரம்பியல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தற்போது சில நிறுவனங்கள் ஆஸ்பர்டேமுக்கு பதில் வேறு ரசாயனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
எனவே, குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பானங்களைக் குடிப்பதற்குப் பதில், நம் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலே போதும். நீராகாரம், நீர் மோர் என உடலுக்கு வலு சேர்க்கும் பானங்களைப் பருகலாம். பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். பழங்களை கடித்துச் சாப்பிடும்போது, அதன் முழுப் பலனும் கிடைக்கும். தாகமாக இருக்கும்போது நீர் அருந்துங்கள்.'' என்ற டாக்டர், குளிர்பானம் அருந்தும்போது உடலில் உள்ள உறுப்புகள் ஏற்படும் பாதிப்புக்களை விவரித்தார்.
உடல் பருமன்
அமெரிக்காவில் 20 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தினமும் குளிர்பானம் குடித்த 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் உடல் பருமன் மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவிகிதம் பேர் ஒன்றரை ஆண்டில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டனர்.
சர்க்கரை அதிகம் உள்ள பானத்தைக் குடிப்பதால் உடல் பருமன் ஏற்படும். ஆனால், டயட் சோடா குடித்தாலும் எடை கிலோ கணக்கில் உயரும் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கக்கூடிய உண்மை. குளிர்பானம் குடிக்கும்போது அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இந்த அளவுக்கு அதிசயமாக, சர்க்கரையானது கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்துவைக்கிறது. இப்படி, படிப்படியாக உடல் எடை அதிகரித்து உடல் பருமன் என்ற நிலை ஏற்படுகிறது. கொழுப்பு உடலில்  படிவதுடன், கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளுக்குள்ளும் படிந்து பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
இதயம் மற்றும் சர்க்கரை நோய்
குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு.
அதிலும் டயட் சோடா அருந்துபவர்களுக்கு 61 சதவிகிதமாக உள்ளது. இவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 80 சதவிகிதமாக இருக்கிறது. உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயானது இதய நோய்க்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ஃபிரக்டோஸ் கார்ன் சிரப். இனிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் இந்த சிரப்பானது உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைப் பாதித்து, இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
பற்கள் / எலும்புகள்
குழந்தைகளின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கும், பெரியவர்களுக்கு எலும்பு மற்றும் பல் வலுவாக இருக்கவும் கால்சியம் தேவை. ஒரு நாளைக்கு போதுமான அளவு கால்சியமும் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் கிடைக்கும் சிறிதளவு கால்சியத்தையும் குளிர்பானங்களில் உள்ள ரசாயனங்கள் வெளியேற்றிவிடுவதால், குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சர்க்கரை மற்றும் குளிர்பானத்தில் உள்ள அமிலங்கள், பல்லில் உள்ள எனாமலை மிக விரைவாகத் தாக்குகின்றன. இதனால் எளிதில் பற்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பற்சிதைவானது பல்லின் வேர் வரை செல்லும்போது பல்லின் ஆயுள் குறையும். குளிர்பானங்களில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம், எலும்பில் உள்ள கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களைச் சிதைத்து வெளியேற்றும். இதனால், எலும்பின் அடர்த்தியைக் குறைத்து ஆஸ்டியோபொரோசிஸ் வருவதற்கு வழிவகுக்கும்.
சிறுநீரகம்
தினமும் குளிர்பானம் அருந்துவது சிறுநீரகப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பை இரு மடங்கு அதிகப்படுத்துவதாக ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் ஆய்வு கூறுகிறது. குளிர்பானத்தில் உள்ள, பாஸ்பாரிக் அமிலத்தை வெளியேற்றும் பணியை சிறுநீரகம் மேற்கொள்கிறது. இது சிறுநீரகத்தில் கல் உருவாகவும், இதர சிறுநீரகப் பிரச்னைகள் உருவாகவும் காரணமாக இருக்கிறது.பெட் பாட்டிலும் பாதிப்புதான்!குளிர்பானங்கள் வரும் பெட் பாட்டில்களில், பிஸ்பினால் ஏ என்ற ரசாயனப்பூச்சு இருக்கும். இது இதய நோயில் தொடங்கி, உடல் பருமன், இனப்பெருக்க மண்டலம் என உடலின் பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கும். கோலா வகை பானங்களில் நிறத்துக்காக சேர்க்கப்படும் செயற்கை காரமெல், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.
- பா.பிரவீன்குமார், படம்: ஸ்டீவ்ஸ்.சு. இராட்ரிக்ஸ்,
மாடல்: திவ்யா, மோனிஷா, அயிஷ்னா
 குளிர்பானம் குடித்ததும் உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள்!
 10 நிமிடங்களில், குளிர்பானத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பாய்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இன்சுலின் தள்ளப்படுகிறது. நிலைமை மோசமடைவதைத் தடுக்க கல்லீரல் பிரச்னையைக் கையில் எடுத்து சர்க்கரையை கொழுப்பாக மாற்றுகிறது.
 40 நிமிடங்கள் கழித்து, குளிர்பானத்தில் இருந்த காஃபின் முழுமையாகக் கிரகிக்கப்படுகிறது. அது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கல்லீரல் கட்டுப்படுத்துகிறது. மூளையில் உள்ள அடினோசின் ரியாக்டர், அரைத்தூக்க நிலையைத் தவிர்க்கிறது.
45 நிமிடங்கள் கழித்து உடலில் டோபோமைன் என்ற ரசாயனம் அதிக அளவில் சுரக்கப்படுகிறது. இந்த ரசாயனம்தான் மூளையில் மகிழ்ச்சியான நிலை தோன்றக் காரணம்.
60வது நிமிடங்களில் பாஸ்பரிக் அமிலமானது உடலில் உள்ள கால்சியம், மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாது உப்புக்களின் அளவைக் குறைக்கிறது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1