பொறியியல் கவுன்சலிங் ஜூன் 21ம் தேதி துவக்கம் .ஜூன் 5ல் ரேண்டம் எண் வெளியீடு
சென்னை, மே 31:
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது கவுன்சலிங் அடுத்த மாதம் 21ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 5ம் தேதி ரேண்டம் எண்ணும், 12ம் தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்படுகிறது. ஜூலை 30ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு கவுன்சலிங் நடக்கும்.
தமிழகம் முழுவதும் 554 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு பிரிவுக்கான 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும். இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், கடந்த மே 4ம் தேதி தொடங்கியது. 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. கடந்த 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 54 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. இதுவரை ஒரு லட்சத்து 89 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஏராளமானோர் தபாலில் விண்ணப்பங்களை அனுப்பி உள்ளனர்.
இதை தொடர்ந்து ரேண்டம் எண் அடுத்த மாதம் 5ம் தேதியும், ரேங்க் பட்டியல் 12ம் தேதியும் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் அடுத்த மாதம் 17 முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. 20ம் தேதி மாற்று திறனாளிகளுக்கான கவுன்சலிங், 21ம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் தொடங்கி 30ம் தேதி வரை நடக்கும். ஆகஸ்ட் 1ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு புதிதாக 11 பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி வழங்கி உள்ளது. இந்த புதிய பொறியியல் கல்லூரிகள் மூலம் 3,300 இடங்கள் கிடைக்கும். இந்த ஆண்டே 11 புதிய பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதனால் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. Category: உயர் கல்வி

0 comments