12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 27 முதல் ஜூன் 10 வரை பள்ளியிலேயே பதியலாம்
.
சென்னை, மே 25:
தேர்ச்சி பெற்ற 12ம் வகுப்பு மாணவ & மாணவிகள் வரும் 27ம் தேதி முதல் ஜூன் மாதம் 10ம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த ஆண்டு 8,53,355 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 7,04,125 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ & மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே அவர்களது கல்வி தகுதியை பள்ளிகளிலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தங்களுடைய கல்வி தகுதியை வேலைவாய்ப்பக இணைய தளம் வாயிலாக தாங்கள் பயின்ற பள்ளி மூலம்க பதிவு செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வி துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணைந்து செய்துள்ளது.
பள்ளிகளில் பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பெற பள்ளிக்கு செல்லும்போது தங்களது குடும்ப அட்டை மற்றும் சாதி சான்றிதழை உடன் எடுத்து செல்ல வேண்டும். மேலும், தங்களது குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 10ம் வகுப்பு கல்வி தகுதியை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையையும் உடன் எடுத்து செல்ல வேண்டும்.
புதிதாக பதிவு செய்யும் மாணவர்களுக்கு புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை அன்றைய தினமே வழங்கப்படும். மாணவ, மாணவிகள் மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் தங்களுடைய கல்வி தகுதியை பள்ளிகளில் பதிவு செய்த பின்னர், தங்களுடைய முன்னுரிமையை வேறு ஒரு வேலைநாளில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.
12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வருகிற 27ம் தேதி வழங்கப்பட உள்ளது. 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பதிவு செய்து வேலைவாய்ப்பு அடை யாள அட்டைகளை பெற் றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Category: கல்வி

0 comments