அதிக லாபம் தருவதாகக் கூறி 32 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மோசடி செய்த பெண் சரண்!
அதிக லாபம் தருவதாகக் கூறி 32 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 ஆயிரம் சவரன் நகையை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தொடர்புடைய பெண் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில சரணடைந்தார்.
கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. இவரும் இவரது கணவர் தமீம் அன்சாரியும் தொழில் தொடங்குவதற்காக தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து 10 சவரன் முதல் 25 சவரன் வரை 13 ஆயிரம் சவரன் நகையை வாங்கியுள்ளனர். இதற்கு பதிலாக மாத மாதம் 15 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறியுள்ளனர். ஆனால் பல மாதங்களாகியும் லாபப் பணத்தைக் கொடுக்கவில்லை எனவும் நகையையும் திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.
இந்த வழக்கில் பாத்திமா இன்று சென்னை டிஜி.பி. அலுவலகத்தில் சரணடைந்தார்.
தொழில் தொடங்குவதற்காக நகை வசூல் செய்ய ஏஜெண்டுகள் 25 பேரை தாங்கள் நியமித்ததாகவும், அவர்கள்தான் நகையை எடுத்துக் கொண்டு மோசடி செய்ததாகவும் பாத்திமா தெரிவித்தார்.
மேலும் தனது கணவரை காணவில்லை, ஏஜெண்டுகள் அவரை கடத்தியிருக்கலாம் என்றும் கணவரை கண்டுபிடித்துத் தருமாறும் டி.ஜி.பி.யிடம் பாத்திமா புகார் அளித்துள்ளார்.
Category: மாநில செய்தி


0 comments