பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
மதுரை பாஸ்போர்ட் சேவை மையத்தில் தினமும் ஆன்லைனில் ஏற்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 755 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் ஸ்கைப் மூலமாக குறைகளைத் தெரிவிப்பது, எந்த சேவை மையத்திலும் விண்ணப்பிக்கும் வசதி உள்ளிட்ட புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.மணீஸ்வரராஜா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
மதுரை பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஆன்லைன் மூலமாக தினமும் 598 விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன்பதிவு தேதி தாமதமாக கிடைக்கிறது. இதைத் தவிர்க்கும் வகையில் அக்.20 ஆம் தேதி முதல், ஆன்லைனில் ஏற்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 755 ஆக உயர்த்தப்படுகிறது.
மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தின்கீழ் வரும் 9 மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், மதுரை அல்லது திருநெல்வேலி பாஸ்போர்ட் சேவை மையங்களில் எங்கு முன்பதிவு தேதி விரைவாக கிடைக்கிறதோ அங்கு முன்பதிவு செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். இதற்காக கூடுதலான அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தவறுகள் ஏதேனும் இருந்தால், அதை சேவை மையத்தில் உள்ள ஏ கவுண்டரில் திருத்திக் கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான அமைப்பு, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மட்டுமே செயல்பட்டு வந்தது. பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்லைனில் குறைகளைத் தீர்ப்பதற்கான அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் இணையதளத்தில் இதற்கான விவரங்களை தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், 1800-258-1800 என்ற கட்டணம் இல்லா தொலைபேசியில் அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். பாஸ்போர்ட் சேவை மையத்தில் விண்ணப்பிக்கும்போது சிறப்பு எஸ்எம்எஸ் சேவைக்காக ரூ.30 செலுத்தினால், விண்ணப்பம் சம்பந்தமான அனைத்து விவரங்களும் தானாகவே விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ். ஆக அனுப்பி வைக்கப்படும்.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் காலை 9.30 முதல் பகல் 12.30 வரை விண்ணப்பதாரர்கள் நேரில் சென்று குறைகளைத் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் மதுரை மற்றும் திருநெல்வேலி பாஸ்போர்ட் சேவை மையத்தில் உள்ள உதவி பாஸ்போர்ட் அதிகாரி அறையில் இருந்து ஸ்கைப் மூலமாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அனைத்து புதன்கிழமைகளிலும் காலை 9.30 முதல் பகல் 12.30 வரை இச் சேவை செயல்படுத்தப்படும் என்றார்.
Category: மாநில செய்தி
0 comments