சாக்லெட் போல மாற்றி 2 கிலோ தங்கம் கடத்தல் மலேசியாவில் இருந்து கடத்தி வந்தவர் சென்னை விமான நிலையத்தில் கைது!
சாக்லெட் போல மாற்றி 2 கிலோ தங்கத்தை கடத்தி வந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதிகாரிகள் சோதனை
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது, இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று காலை மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அராபத் (வயது 34) என்பவர் வந்தார்.
சாக்லெட்டாக மாற்றி கடத்தல்
இவர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு வந்திருந்தார். இவர் மீது சந்தேகம் கொண்டு அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 3 சாக்லெட் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் தங்கத்தை சாக்லெட் போல் மாற்றி கடத்தி வந்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அராபத்தை கைது செய்தனர். விசாரணையில், மலேசியாவிற்கு சென்று வந்தால் டிக்கெட் செலவு போக ரூ.5 ஆயிரம் பணம் தருவதாக கூறியதால் கடத்தி வந்ததாக அராபத் கூறினார். இந்த கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி சுங்க இலாகாவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Category: மாநில செய்தி
0 comments