பெரம்பலூர் பேருந்தில் வெடிகுண்டு "ரிமோட் கண்ட்ரோல்' மூலம் வெடிக்க வைக்கப்பட்டதா? போலீஸார் விசாரணை!
பெரம்பலூர் அருகே தனியார் பேருந்தில் வெடித்த பெட்ரோல் குண்டு "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் வெடிக்க வைக்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதால், தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூரிலிருந்து, துறையூருக்கு வியாழக்கிழமை இரவு தனியார் பேருந்து ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றது. அப்போது, ஈச்சம்பட்டி பங்களா பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பேருந்தின் முன்பக்க படிக்கட்டின் அருகே பயணிகளின் இருக்கையின் கீழிலிருந்த மர்மப் பொருள் வெடித்தது. இதில் 9 பயணிகள் காயமடைந்து, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட விசாரணையில் பிளாஸ்டிக் பாட்டிலில் எளிதில் தீப்பற்றி வெடிக்கக்கூடிய திரவங்களை பெட்ரோலில் கலந்து நிரப்பி, அத்துடன் பேட்டரி மற்றும் வயர் சர்க்யூட் இணைத்து, குறித்த நேரத்தில் வெடிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்துள்ளது தெரியவந்தது.
இந்தப் பேருந்தில் பயணம் செய்த லோகநாதன், கண்ணன் ஆகியோர் மீது சந்தேகமடைந்த உளவுப்பிரிவு போலீஸார், அவர்களை தனித்தனி இடங்களில் வைத்து மேற்கொண்ட விசாரணையில் சம்பவத்தில் அவர்களுக்குத் தொடர்பில்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றிய பொருள்களில் "ரிமோட் கன்ட்ரோல்' உதவியுடன், அந்த குண்டை வெடிக்க வைப்பதற்கான அடையாளம் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த வகை வெடிகுண்டு தமிழகத்தில் முதல்முறையாக, இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக உளவுப்பிரிவு போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், தனிப்படை மற்றும் உளவுப்பிரிவு போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments