பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை வளர்க்காதீர்கள்… வளர விடுங்கள்..!’
குழந்தைகளிடம் பெற்றோர் எப்படிப் பழக வேண்டும்:
‘குழந்தை வளர்ப்பு, ஒரு கலை மட்டுமல்ல… அறிவியலும்கூட!’ (Parenting is not only an art, it is also a science)என்பதுண்டு!
அதற்காக, ‘அறிவியல் பூர்வமாக வளர்க்கிறேன் பேர்வழி’
என்று எதற்கெடுத்தாலும் டாக்டரைத் தேடி ஓடுவது…
நிபுணர்களிடம் போய் க்யூ கட்டி நிற்பது… என்று ஆட ஆரம்பித்து விடுவார்கள் பலரும்.
ஆனால், குழந்தையை நாம் வளர்க்க வேண்டியது இல்லை என்பதுதான் உண்மை. இதற்காகவேதான் சமீபகாலங்களாக ‘குழந்தைகளை வளர்க்காதீர்கள்… வளரவிடுங்கள்!’ என சத்தமாகக் கூற ஆரம்பித்துள்ளனர்
உலகெங்கும் உள்ள குழந்தையியல் அறிஞர்கள். குழந்தைகளிடம் பெற்றோர் எப்படிப்பழக வேண்டும் என்பதற் கான பயிற்சிகள்கூட வெளிநாடுகளில் நடை பெறுகின்றன. அதன் ரத்தினச் சுருக்கமாக நெய்யப்பட்டுள்ள, குழந்தை வளர்ப்புக்கான டிப்ஸ் கள், உங்கள் குழந்தைகளை ‘குட் பாய்’, ‘குட் கேர்ள்’ ஆக்கிவிடும்!
அப்புறமென்ன… நீங்கள்தான் ‘பெஸ்ட் அம்மா – அப்பா’!
ஊட்டி வளர்க்காதீங்க!
....................................
*ஒன்றரை வயதில் இருந்தே குழந்தைகளை அவர்களாகவே
உண்ணப் பழக்குங்கள். இட்லி துண்டுகளிலிருந்து உருண்டை
சாதம் வரை படிப்படியாகப் பழகட்டும். பிள்ளைகளின் உண்ணும் ஆர்வத்தை தூண்ட இதுவே முதல் படி.
*குழந்தைகள் உங்களைப் போலவே ‘சுத்தபத்தமாக’ சாப்பிட
வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயமில்லை. உணவு சிந்தும்,
உடலெல்லாம் அழுக்காகும், நேரம் எடுக்கும்… பரவாயில்லை.
அதற்காகக் குழந்தையைத் திட்டுவதோ, அடிப்பதோ தவறு . குழந்தைகள், உணவை வெறுக்க இதுவும் ஒரு காரணமாகி விடும்.
*குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவின் அளவு மிகவும் முக்கியம். எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு மட்டும் ஊட்டுங்கள். ‘இன்னும் ஒரு வாய் சாப்பிட்டா நல்லது தானே’ என்று திணிப்பது, சரியான அணுகுமுறையல்ல.
*‘கொஞ்சம் சோறு சாப்பிடும்மா… சாக்லெட் வாங்கித் தரேன்’, ”கொஞ்சம் கீரை சாப்பிடும்மா… ‘குர்குரே’ வாங்கித் தரேன்” என்று ஆசை காட்டி சாப்பிட வைப்பது, அம்மாக்கள் செய்யும் தவறு.
அது, ‘ இந்த சோற்றையும் கீரையையும் கஷ்டப்பட்டு (!) சாப்பிட்டுட்டா… சாக்லெட், ஸ்நாக் இதெல்லாம் கிடைக்கும்!’ என குழந்தைகளுக்கு உணவின் மீது இன்னும் சலிப்பையும்,
நொறுக்குத் தீனியின் மீது இன்னும் ஆசையையும் விதைக்கும்
* ”என் பிள்ளைக்கு இனிப்பே கொடுக்கமாட் டேன்…
உப்பே சேர்க்க மாட்டேன்” என்று கர்வப்படும் அம்மாக்களே, கவனம்! ஏனெனில், குழந்தைகளுக்கு இனிப்பு, உப்பு என எல்லா சுவையும், சத்தும் தேவைதான்!
எனவே எந்தச் சுவையையும், அதன்மூலம் சத்தையும்
அவர்களுடைய உணவிலிருந்து முற்றிலுமாக நீக்கும் தவறைச் செய்து விடாதீர்கள்! கூடவே, இனிப்பே சாப்பிடாத குழந்தைக்கு பின்னாளில் இனிப்பு அறிமுகமாகும் போது, வட்டியும் முதலுமாகச் சேர்த்து சாப்பிட்டு உடலைக் கெடுத்துக்கொள்ளவும் வாய்ப்புள்ளது !
*90:10 முறையை உணவில் கடைபிடியுங்கள். அதென்ன 90:10? சிம்பிள்… 90 சதவிகிதம் உணவுகள் குழந்தைகளின்
ஆரோக்கியத்துக்காக இருக்கட்டும். இனிப்பு, ஸ்நாக்ஸ் என
10 சதவிகிதம் அவர்களின் சுவைக்காக இருக்கட்டும். தப்பில்லை.
*எப்போதும் குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருப்பது தவறு. குழந்தைகள் உணவு உண்ண வேண்டிய நேரத்தில்தான் உண்ண வேண்டும். சதா கொறித்துக் கொண்டே இருந்தால் அவர்கள் சரியான நேரத்தில் ஆரோக்கியமான
உணவு சாப்பிட முடியாது.
*உணவு விஷயத்தில் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக நீங்கள் இருக்க வேண்டும். உங்களு க்கு ஒரு டைப் சாப்பாடு… குழந்தைகளுக்கு வேறு மாதிரி என்பது சரி வராது. அதாவது, நீங்கள் சிப்ஸ், குளிர்பானம் சாப்பிட்டால் குழந்தையும் அதையேதான் விரும்பும்.
* ‘ஜர்னல் பீடியாட்ரிக்’ எனும் பத்திரிகையின் ஆய்வு என்ன சொல் கிறது தெரியுமா? பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, எனர்ஜி டிரிங்க்ஸ்… இதெல்லாம் குழந்தைகளுக்கு ஆபத்தானவை. 100% பழச்சாறு என்று ஜிகினா வேலை காட்டும் விளம்பரங்களிலும் உண்மை இல்லை. எனவே, நீங்களே பழங்கள் வாங்கி குழந்தைகளுக்குக் கொடுங்கள். அதுவே நல்லது!
. *குழந்தைகளுக்கு டூரிஸ்ட் ஸ்பாட்களும் ஒன்று தான் தெருமுனை ‘பார்க்’கும் ஒன்று தான். அவர்கள் உற்சாகமாக விளையாடக்கூடிய ஓர் இடமாக இருந்தால் அவர்களுக்கு அது போதுமானது.
. *தினமும் ஒரு மணி நேரமாவது பிள்ளைகளுடன் செலவிடுங்கள். பேசி, சிரித்து, விளையாடி அவர்களிடம் வகுப்புகளில் சொன்ன கதைகளைக் கேட்டு மகிழுங்கள். குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான இணைப்பை இது வலுவாக்கும்.
* குழந்தைகள் உங்களை எப்போது வேண்டுமானாலும்
தொலைபேசியில் அழைக்கலாம் எனும் அனுமதி கொடுங்கள்.
அவர்களுடைய அவசரத் தேவைக்கோ, மனம் சோர்வாக இருந்தாலோ, திடீர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவோ
அவர்கள் உங்களை அழைக்கட்டும். அலுவலகம், மீட்டிங்
எல்லாம் இரண்டாம்பட்சம்தான். குழந்தைகளுக்கு நீங்கள்
எப்போதும் கூப்பிட்டதும் பேசுபவராக இருக்க வேண்டியது
மிக முக்கியம்.
குழந்தைக்கு தன்னம்பிக்கை ஊட்டுங்க..
...................................................................
* உங்கள் அன்பை குழந்தைக்குத் தெரியப்படுத்துங்கள். ஆம்…
‘ அப்பா, அம்மாவுக்கு என் மேல அவ்ளோ அன்பு’ என்று குழந்தை உணரும்படியான உங்களின் நிபந்தனையற்ற அன்பே அவர்கள் தன்னம்பிக்கைக்கான முதல் தேவை.
* நல்ல வழிமுறைகள் காட்டுங்கள். எதைச் செய்ய வேண்டும்,
எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் சில ஒழுங்குகளைப் புகுத்துங்கள். உதாரணமாக… வீட்டுப் பாடங்கள் செய்வது அல்லது விளையாட்டுகளில் சில விதிமுறைகள் தருவது. அவற்றை அவர்கள் கடைபிடிக்கப் பழக்குங்கள். சரியாகச் செய்யும்போது பாராட்டுங்கள்.
* நண்பர்கள், உறவினர்கள் குடும்பத்தின ரோடு சேர்ந்து சுற்றுலா செல்லுங்கள். அந்தக் குடும்பங்களிலும் குழந்தைகள் இருந்தால் இன்னும் சிறப்பு. அருகிலுள்ள இடங்களுக்குச் செல்வதே போதுமானது.. பிற குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன்
நேரம் செலவிடுதல், உங்கள் குழந்தையின் வெளி
உலகப் பழக்கத்தை வளர்க்கும்
.
குழந்தைகளை தட்டிக் கொடுங்க..
.........................................................
*குழந்தைகளைச் சரியான நேரத்தில் தூங்கப் பழக்குங்கள்.
குழந்தைக்கு எப்போது தூக்கம் வருகிறது என்பது உங்களுக்கே தெரியும். கண்ணைக் கசக்கும், கொட்டாவிவிடும், தோளில் தொங்கும், சோர்வாய் இருக்கும். உடனே குழந்தையைப்
படுக்க வையுங்கள்.
இப்படி கொஞ்ச நாள் பழக்கினாலே, தூக்கம் வரும்போது தானாகப் போய்படுத்துக் கொள்ளும்! படுக்கையறையில் கொஞ்சம் வெளிச்சம் இருக்கட்டும்.
அது குழந்தையை நீங்கள் கவனிப்பதற்காக! குழந்தையின் தூக்கத் தைக் கெடுக்கும் அளவுக்கு வெளிச்சம் வைக்காதீர்கள்.
*குழந்தைகளின் விரல் சப்பும் பழக்கத்தை நீங்கள் மிகச் சின்ன வயதிலேயே நிறுத்திவிட முடியும். முயற்சிதான் தேவை.
நன்றாகப் பழகி விட்டால் பின்னர் அதை நிறுத்துவது வெகு கடினம்.
*சின்னதாக குழந்தை தவறினாலே பதறியடித்துத் தூக்காதீர்கள். அவர்கள் தானாக எழுந்து வரப்பழக்குங்கள்.
நீங்கள் அருகில் இருந்து ஊக்கப்படுத்தினாலே போதும்.
நீங்களே வியக்கும்படி அவர்கள் வளர்வார்கள்.
*பிறருக்கு உதவுதல், பிறரை மதித்தல் என்று குழந்தைகளுக்கு
நல்ல செயல்களைக் கற்றுக் கொடுங்கள்.
கூடவே, நீங்களும் அது போல் நடந்து கொள்ளுங்கள்.
நீங்கள் வேலைக்காரரைத் திட்டினால் உங்கள் குழந்தையும்
அப்படியே திட்டும். அதைத் தவிர்த்து, அவர்களுடைய குணாதிசயங்களை நல்ல முறையில் கட்டி எழுப்புங்கள்.
குழந்தைகளைக் கண்டிக்கவும் மறந்துடாதீங்க..!
................................................................................
*குழந்தைகளைக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது மிக முக்கியம். அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் சிறு வயதிலேயே செய்யுங்கள்.
குழந்தைகளைப் பெற்றோர் கண்டித்து, தண்டித்து வளர்ப்பதில்
தவறில்லை. ஆனால், எதற்கும் ஓர் எல்லையுண்டு என்பதை
மனதில் கொண்டு தண்டிக்க வேண்டும்.
ஆனால், அது சின்ன வயதிலயே ஆரம்பிக்க வேண்டும்.
வளரும் வரை செல்லம் கொடுத்துவிட்டு, வளர்ந்தபின் தண்டிக்காதீர்கள். அது அவர்களை ரொம்பவே பாதிக்கும்.
*குழந்தையை அப்பா கண்டிக்கும்போது அம்மா தடுக்கக் கூடாது. இருவரும் ஒரேமாதிரி நடந்துகொள்ள வேண்டும்.
தப்பு செய்தால் இரண்டு பேருமே கண்டிப்பார்கள், தண்டிப்பார்கள் எனும் நிலை வேண்டும். அதேபோல நல்லது செய்தால் இருவரும்
பாராட்ட வேண்டும். அதுதான் குழந்தை குழம்பாமல் நல்ல செயல்களை விரைவில் கற்க உதவும்.
*ஒரேயடியாகச் செல்லம், ஒரேயடியாகத் தண்டனை என இரண்டு எல்லைகளில் நிற்காதீர்கள். ஒரு பேலன்ஸ் இருக்கட்டும். முதல் முறை தவறு செய்யும்போதே தண்டிக்காதீர்கள்.
செய்தது தவறு என புரியவையுங்கள். சில எச்சரிக்கைகள் செய்யுங்கள். இவை எல்லாம் மீறப்படும்போது தண்டியுங்கள்.
*மம்மி அடிக்க மாட்டாங்க, சும்மா மிரட்டிட்டேதான் இருப்பாங்க’
என குழந்தை நினைக்கக் கூடாது. தவறு செய்யும்போது அந்த
நேரத்திலேயே கண்டித்து, தண்டிப்பது நல்லது…
அப்பாவரும் வரை காத்திருந்து தண்டிப்பதை விட...
*மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பழக்கத்தை… செல்லமாகவோ, கண்டிப்புடனோ குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும்.
தேவைப்படுபவர்களுக்கு வழங்குவது நல்ல பண்பு என்பதை அவர்களுக் குப்புரிய வைக்க வேண்டும்.
அவர்கள் கையால் வறியவருக்கு உதவிகள் செய்ய வைக்கலாம்.
அதற்கு முதல் கட்டமாக, கொடுக்கும் பழக்கத்தை நீங்கள்
வளர்த்துக் கொள்வது முக்கியம்.
*குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து, எதையாவது எடுத்துக் கொண்டு வருவது சகஜம். உண்மையில் குழந்தைகளுக்கு ‘இது தன்னுடையதல்ல, எடுக்கக் கூடாது’ என்பதல்லாம் தெரியாது.
அந்த அறிவை ஊட்ட வேண்டியது பெற்றோரின் கடமை.
குழந்தையின் தன்மையை உணர்ந்து தெளிவாகப்
புரிய வைக்க வேண்டும். தொடர்ந்தால், கண்டிக்க வேண்டும்.
*காலம் தவறாமையை குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். குறிப்பாக, நீங்களும் அதைக் கடைபிடியுங்கள்.
அரக்கப் பரக்க குழந்தையை ஸ்கூலுக்கு இழுத்து கொண்டு ஓடுவது…
அப்படியும் பத்து நிமிடம் லேட்டாக கொண்டு விடுவது போன்ற பழக்கங்களை விட்டொழியுங்கள்
Category: மருத்துவம்




0 comments