சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது!
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கும். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது, இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளும், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று சென்னைக்கு விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த சேர்ந்த முகமது (வயது 38) என்பவர் சுற்றுலா விசாவில் வந்திருந்தார். அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் குழந்தைகளுக்கான சாக்லெட்டுகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் சாக்லெட் போல் தங்கத்தை வெட்டி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 830 கிராம் தங்க சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
இதேபோல் அதே விமானத்தில் வந்த திருச்சியைச் சேர்ந்த முகமது இப்ரகீம் (58) என்பவர் வந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டில் தங்கத்தை தகடுபோல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 820 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள் முகமது மற்றும் இப்ரகீமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிங்கப்பூரில் இருந்து வந்த 3 பேர் தங்கள் சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 பேரிடம் இருந்த தையல் எந்திரங்களை பிரித்து பார்த்தபோது அதில் 6 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 80 லட்சம் ஆகும்.
இதையடுத்து சென்னையைச் சேர்ந்த 3 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
Category: மாநில செய்தி


0 comments