மீட்கப்பட்ட நர்சுகளுக்கு துபாய் ஆஸ்டர் DM மருத்துவ மனையில் வேலை வழங்க விரும்பும் இந்தியத் தொழிலதிபர்!
துபாய், ஜூலை 8-
ஈராக்கில் சன்னி பிரிவு ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் மேற்கொண்டுள்ள உள்நாட்டு யுத்தம் தீவிரமடையத் தொடங்கிய வேளையில் அங்கு வேலைக்காக சென்ற 46 இந்திய நர்சுகளை மத்திய அரசு பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்து இந்தியாவில் சேர்த்துள்ளது.
போரினால் பாதியில் திரும்பியுள்ள இந்தப் பெண்கள் மீண்டும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வரவிரும்பினால் ஐக்கிய அரபுக் குடியரசு, ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இவர்களுக்கு வேலை அளிக்கமுடியும். இதற்கு அவர்கள் அங்குள்ள உத்தியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்று துபாயில் செயல்பட்டுவரும் ஆஸ்டர் டிஎம் சுகாதார மருத்துவ மையத்தின் தலைவராக இருக்கும் ஆசாத் மூப்பன் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஏற்பட்டுள்ள பேரழிவில் சிக்கி நாடு திரும்ப நேர்ந்த இவர்களை ஆஸ்டர் மெட்சிட்டி, கொச்சி, எம்ஐஎம்எஸ் மருத்துவமனைகள், கோழிக்கோடு, கோட்டக்கல் மற்றும் வயநாடு மருத்துவமனை என்ற முன்னுரிமையின் அடிப்படையில் வேலைக்குத் தேர்வு செய்யப்படுவர் என்றும் மூப்பன் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி அவர்கள் அனைவருக்கும் தங்களின் உடனடித் தேவைகளுக்காக தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மருத்துவராகத் தொழிலை ஆரம்பித்து தற்போது வெளிநாடுவாழ் இந்தியத் தொழிலதிபராக மாறியுள்ள மூப்பன், கேரள அரசின் குடியுரிமை பெறாதவர்கள் அமைப்பின் (நோர்கா) இயக்குனராகவும் செயல்பட்டு வருகின்றார். இவருக்கு முன்னரே அபுதாபியில் செயல்பட்டுவரும் எம்என்சி தொழில்நிறுவனம் ஒன்றின் தலைவரான பி.ஆர். ஷெட்டி இந்த நர்சுகளுக்கான வேலை வாய்ப்பை கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
Category: துபாய்


0 comments