வேப்பந்தட்டை அருகே 10-க்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிப்பு!!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 10-க்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேப்பந்தட்டை அருகே உள்ள அனுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி (28). இவர் கடந்த மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் மனைவி சத்யா (22). கர்ப்பிணியான இவர், கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரம்பலூரில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சோதனை மேற்கொண்டதில், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள், அவரை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட சத்யாவிற்கு தனிப்பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை, செங்கமலை, முருகன் ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை, செல்லம் (30), பூமி (2), மணிவண்ணன் (28), கவிதா (31), செல்வகுமார், கல்பனா, இளவரசி, நல்லம்மாள் உள்ளிட்ட 10-க்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, மருத்துவக் குழுவினர் அயிலூர் மற்றும் குடிகாடு கிராமத்திற்குச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Category: மாவட்ட செய்தி
0 comments