குளிர்ச்சி தரும் கோரைப் பாய்!!
மழைக் காலத்துடன் தொடங்கிய இந்த வருஷக் கோடை, வழக்கம்போல் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. வெயிலைச் சமாளிக்க மக்கள் பல்வேறு யுக்திகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். இரவில் துண்டைத் தண்ணீரில் நனைத்து மேலுக்கு மூடித் தூங்குபவர்களும் உண்டு. ஆனாலும் முதுகில் உஷ்ணத்தை உணர்வார்கள்.
இந்த மாதிரியெல்லாம் முயற்சிக்கும் நாம் படுக்கை விஷயத்தில் கவனம் இல்லாமல் இருப்போம். இரும்புக் கட்டிலிலேயோ நவீன மெத்தைகளிலேயே படுத்துக்கொண்டு வெக்கையை விரட்ட நினைப்போம். அது சாத்தியமல்ல. இதற்கு நம் பாரம்பரிய முறையே சரியான வழி. கோரைப் பாயை உபயோகிப்பதுதான் இதற்குச் சிறந்த தீர்வு. இன்னும் பெரும்பாலான கிராமங்களில் படுக்கை விரிப்பாகக் கோரைப்பாயையே உபயோகித்துவருகிறார்கள்.
தொடக்க காலத்தில் தென்னை, பனை ஓலைகளில் பாய்கள் தயாரித்துவந்தனர். பின்னாட்களில்தான் கோரைப்பாய் நெய்தார்கள் என்கிறார் எழுத்தாளர் கழனியூரன். ஆற்றோரத்தில் நீரோட்டம் உள்ள இடங்களில் கோரைப் புற்கள் வளர்கின்றன. இந்தக் கோரைகள் முளைத்ததில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்ப்பிடிப்பான நிலத்தில் நின்று வளர்வதால், இதிலிருந்து செய்யப்படுகிற பாய்கள் படுப்பதற்கு சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இன்றைக்கு பிளாஸ்டிக் நுழையாத இடமே இல்லை என்றாகிவிட்டது இல்லையா? பாயிலும் பிளாஸ்டிக் வந்துவிட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் இம்மாதிரியான பாய்களே அதிகமாக வாங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவை உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை. கோரைப் பாய் போன்ற இயற்கையான பாய்களைப் பயன்படுத்துவது உடலுக்கு ஆரோக்கியம். மேலும் அழிந்துவரும் ஒரு தொழிலுக்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பும் நமக்குக் கிடைக்கும்.
Category: துனுக்குகள்
0 comments