கூடுதல் வகுப்பறை, ஆய்வகங்கள் கட்ட காசோலை அளிப்பு!!
பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில், கூடுதல் வகுப்பறைகள் கட்டடங்கள் மற்றும் ஆய்வகங்கள் கட்டுவதற்கு ரூ. 1 கோடியே 2 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான காசோலையை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது திங்கள்கிழமை வழங்கினார்.
கிராமப்புற பள்ளிகளின் மேம்பாட்டிற்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வகங்கள் கட்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கூடுதல் வகுப்பறைக் கட்டடம் ஒன்றுக்கு ரூ. 7.53 லட்சம் வீதம் குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, கவுள்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஆய்வகக் கட்டடங்கள் ஒன்றுக்கு ரூ. 8.3 லட்சம் வீதம் காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளி, குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி, மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நெய்குப்பை அரசு உயர்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, ஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதிக்கான காசோலையை, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் என். செல்வராஜிடம் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் செ. காமராசு, கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மா. அண்ணாதுரை, கட்டட பொறியாளர் க. தினேஸ்ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
Category: மாநில செய்தி
0 comments