மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வழங்குவது எப்போது?
பல்வேறு துறை சார்ந்த கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை வழங்கி வரும் நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநரகம் மட்டும் தங்களுக்கு சம்பந்தம் இல்லாதது போன்று அமைதியாக இருப்பது மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ் 2 தேர்வு நேற்று வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னதாகவே விண்ணப்பங்கள் வழங்குவதில் நெருக்கடி ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள்,பொறியியல் கல்லூரிகள், பட்டய படிப்புகள், சட்ட படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகள் மற்றும் விவசாயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஒரு வாரமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கான் முன்னேற்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்தி வரும் நேரத்தில், மருத்துவக் கல்வி இயக்குநரகம் தங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லாதது போன்று, மாணவர் சேர்க்கை குறித்த எந்த ஒரு விபரங்களையும் அறிவிக்காமல் உள்ளது. மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்திலும் (www.tnhealth.org) விண்ணப்பங்கள் வழங்குவது குறித்த எந்த தகவலும் இல்லாமல் இருப்பது மாணவர்களிடையேயும், பெற்றோர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை தொடர்புகொண்டபோது, "நாளை விண்ணப்பங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும், அதன் பிறகு இணையதளத்திலும் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும்" என்றனர். "மற்ற கல்வி நிறுவனங்களைப் போன்று விண்ணப்பங்கள், காலியிட விபரம், கலந்தாய்வு விபரங்கள் இணையதளத்தில் எளிதாக புரியும்படி தெரிவிக்க வேண்டும்" என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category: உயர் கல்வி
0 comments