தலைமைத் தளபதி நியமிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல்: தல்பீர் சிங் சுகாக் பெயர் பரிந்துரை!!
தற்போதைய ராணுவ தளபதி ஜெனரல் விக்ரம் சிங் ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். ராணுவ நடைமுறைகளின்படி இரண்டு மாதங்களுக்கு முன்பே புதிய தளபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. புதிய அரசு பதவியேற்ற பிறகே முக்கியமான நியமனங்கள் நடைபெற வேண்டும் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பிய மத்திய அரசு, ஆணையத்தின் முடிவுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விளக் கம் அளித்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அளித்த பதிலில், மத்திய அரசு விரும்பினால் ராணுவ தலைமைத் தளபதியை நியமிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளது.
பதவிமூப்பின் அடிப்படையில் தற்போது துணைத் தளபதியாக உள்ள லெப்டினென்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுகாக் (59) புதிய தலைமைத் தளபதியாக நியமிக் கப்படுவார் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நியமன விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை மாலை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அதில் லெப்டினென்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுகாக்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் பிரதமர் தலைமையில் நியமன விவகாரங் களுக்கான அமைச்சரவைக் குழு கூடி இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.
Category: மாநில செய்தி
0 comments