ஆபத்தை ஏற்படுத்தும் ‘நேச்சர் ஸ்டடி’? சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!!
வனவிலங்குகளைக் கண்டு மிரண்ட மனிதர்கள், இன்று சாதாரணமாக அவற்றை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். தினமும் உலா வருவதால் யானைகள்கூட தற்போது பழக்கப்பட்ட விலங்கு களாக மாறிவிட்டன.
ஆனால், அதிகபட்சமாக உயிரியல் பூங்காவில் மட்டுமே விதவிதமான விலங்குகளை கண்டுள்ள நகர மக்களுக்கு விலங்குகள் குறித்த விழிப்புணர்வு வேண்டுமல்லவா! தப்பித்தவறி நகருக்குள் ஒரு விலங்கு வந்து விட்டால் என்ன செய்வது? அதற் காகவே கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இயற்கையை படிப்பது - நேச்சர் ஸ்டடி என்ற பெயரில், வ.உ.சி. உயிரியல் பூங்காவில் இந்த முறை அறிமுகமாகியுள்ளது. பூங்காவில் வளர்க்கப்பட்டுவரும் பலவிதமான உயிரினங்களை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் காட்டி, சிலவற்றை அவர்களிடமே கொடுத்து ‘நேச்சர் ஸ்டடி’ மேற்கொள்ளப்படுகிறது.
வன விலங்குகளை பாதுகாப் பதன் அவசியத்தையும், அவற்றின் வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் விலங்குகளை எளிதில் புரிந்துகொள்ளலாம் என்பது பூங்கா நிர்வாகத்தினரின் பதில்.
தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இந்த பயிற்சிமுறை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வன விலங்குகளை துன்புறுத்தும் விதமாக பூங்கா நிர்வாகம் செயல்படுவதாக வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாம்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்பது அவசியமானது.
ஆனால், அவர்கள் கையில் கொடுத்தால்தான் விழிப்புணர்வு ஏற்படும் என்பது தவறு. எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படக் கூடும். வன ஊழியர்களுக்கே பாம்புகளை கையாள கருவி தேவை என வலியுறுத்தப்படுகிறது. இதில், ஏதுமறியாத மாணவர்களை தன்னிச்சையாக செயல்படவிடுவது சட்டவிரோதமானது என்கின்றனர் வன ஆர்வலர்கள்.
வனத்துறை சொல்வதென்ன?
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த விலங்குகள் பூங்கா விலங்குகளாக மாறிவிட்ட பிறகு, அவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அந்த நிர்வாகத்தை சார்ந்தது. ஆனால், விதிமுறைகளை மீறி விலங்குகளை பொதுமக்கள் கையாளக்கூடாது.
இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை பராமரிக்க நிர்ணயிக்கப் பட்டுள்ளவர்கள் மட்டுமே அவற்றை பாதுகாப்பு கருவிகளுடன் நெருங்க வேண்டும் என்றனர்.
தமிழ்நாடு பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் கொ.மோகன்ராஜ் கூறுகையில்,
வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972, பிரிவு 38(J) வில் உயிரியல் பூங்காவில் வன விலங்குகளை சீண்டவோ, இடையூறு செய்யவோ, காயப்படுத்தவோ, உணவு கொடுக்கவோ, சத்தம் போடவோ, குப்பை போடவோ கூடாது.
விலங்குகள் குறித்து அனை வரும் அறிந்து கொள்ளும்படி தகவல்களை அங்கு எழுதி வைக்க மட்டுமே அனுமதி உள்ளது.
தொற்றுநோய்
விலங்குகளுக்கும், மனிதர் களிடமிருந்து தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. ஊழியர்களுக்கே குறிப்பிட்ட காலத்திற்குள் மருத்துவ பரிசோதனை அவசியம். கோயில் யானைகள் சிலவற்றுக்கு காசநோய் அறிகுறிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மக்களிடம் இருந்து பரவுவதே இதற்கு காரணம் என்றார்.
தற்போது கோடை விடுமுறை காரணமாக அதிகளவில் பார்வையாளர்கள் உயிரியல் பூங்காவில் திரள்கின்றனர். நேச்சர் ஸ்டடி தொடர்பான புகைப்படங்களை பார்க்கும்போது, விலங்குகளைத் தொடவும், துன்புறுத்தவும் முயற்சிக்கின்றனர்.
இதைத் தடுக்க வலைத்தடுப்புகளை உயரப்படுத்தி, கண்காணிப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். இது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
‘தவறில்லை’
வ.உ.சி. உயிரியல் பூங்கா இயக்குநர் அசோகன் கூறுகையில், அனைவருக்கும் விலங்கு கள் குறித்து விழிப்புணர்வு அறிவை மேம்படுத்துவது உயிரியல் பூங்காவுக்கான நடைமுறைதான். இதில் எந்த தவறும் இல்லை. ஆர்வமுள்ள அனைவருக்கும் கட்டாயம் விலங்குகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வழங்க வேண்டும் என்றார்.
Category: உயர் கல்வி, கல்வி, மாநில செய்தி, மாவட்ட செய்தி
0 comments