லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறை!!
பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 2002-ல் அந்தநல்லூர் பகுதியில் 1.2 ஏக்கர் நிலத்துக்கு பெயர் மாற்றம் செய்வதற்காக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சண்முகநாதனைத் தொடர்பு கொண்டார்.
இதற்காக அவர் ரூ. 1000 லஞ்சமாகக் கேட்டதாகத் தெரிகிறது. லஞ்சம் தர விரும்பாத சக்திவேல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸாரின் ஆலோசனைப்படி கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தில் பணத்தைக் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீஸார் சண்முகநாதனைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி ஊழல் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறீதர், குற்றவாளி சண்முகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
Category: மாவட்ட செய்தி
0 comments