அபுதாபியில் தவறாக கைது செய்யப்பட்ட இந்திய பட்டதாரி விடுதலை!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தவறான பதிவுகளின் படி கடந்த அக்டோபர் 20ந் தேதி கைது செய்யப்பட்ட இந்தியாவை சேர்ந்த 27 வயது பட்டதாரி வாலிபர் முஹம்மது ரியாஸ் தற்போது நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக "கல்ப் நியூஸ் ஆங்கில நாளேடு" வெளியிட்டுள்ள தகவல் வருமாறு..
பொறியியல் (எலக்ட்ரானிக் கம்யூனிகேசன்) இளநிலை பட்டதாரி இளைஞரான முஹம்மது ரியாஸ் என்ற இந்திய பிரஜை கடந்த மார்ச் 20,2013 ல்,அபுதாபியில் உள்ள ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாக வேளையில் சேர்ந்துள்ளார்.
11 ஆண்டுகளுக்கு முன் நாடு கடத்தப்பட்ட குற்றவாளி..
இந்நிலையில் கடந்த ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறைக்காக கடந்த அக்டோபர் 8, 2013 ல் தாயகம் சென்று விட்டு,பத்து நாள்கள் கழித்து அக்டோபர் 20 ஆம் தேதி அபுதாபி திரும்பும் போது,விமான நிலையத்தின் (Immigration) குடியேற்ற சோதனையின் போது,கடந்த பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் அமீரகத்திலிருந்து நாடுகடத்தப் பட்ட குற்றவாளி என்பதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 20 ந்தேதி முதன் முதலாக இந்த நாட்டிற்குள் வேலைக்காக வந்த தாம் எவ்வாறு 11 ஆண்டுகளுக்கு முன்னர் நாடுகடத்தப் பட்ட குற்றவாளியாக முடியும்..? என்ற அம்சங்களோடு சிறையில் இருந்தவாறே சட்ட போராட்டத்தில் ஈடு பட்டுள்ளார் ரியாஸ்.
இது குறித்து அபுதாபி காவல்துறை தீவிர விசாரணை நடத்தியது.
தவறான குற்றப்பதிவு
கடந்த பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் திருட்டு மற்றும் பாலியல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நாடு கடத்தப் பட்ட முஹம்மது அலி முஹம்மது என்பவரது குற்ற பதிவு Data இந்த வாலிபர் ரியாஸ் பெயரோடு தவறாக இணைக்கப் பட்டுவிட்டது என்பது விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.இதனால் இவர் தவறாக கைது செய்யப் பட்டுள்ளார் என்பது நிரூபணம் ஆனதை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை ரியாசை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
மொட்டை அடித்து சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில்...
நான் பெருநாளுக்காக தாயகம் சென்றுவிட்டு திரும்பிய என்னை விமான நிலைய காவல்துறை என்னை "நாடுகடத்தப் பட்ட குற்றவாளி" என்று சொல்லி கைது செய்து சிறையில் அடைத்து,தலைக்கு மொட்டை அடித்தும்,கை,கால்களை சங்கிலியால் பிணைந்தும் வைத்திருந்தனர்.கடந்த பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நபர் இந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப் படும் போது எனக்கு வெறும் 16 வயது தான்.அப்போது இந்தியாவில் படித்து கொண்டிருந்தேன் என்றார் முஹம்மது ரியாஸ்.
பழைய குற்றப் பதிவேட்டில் தவறாக இணைக்கப்பட்ட முஹம்மது ரியாசின் பெயரை நீக்கி விட்டதாக அபுதாபி போலிஸ் தெரிவித்துள்ளது.
Category: வளைகுட செய்தி
0 comments