கழிவுநீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கத் திட்டம்!
பெங்களூருவில் கழிவுநீரிலிருந்து மின்சாரம் தயாரிக்க குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூருவில் சனிக்கிழமை அந்த வாரியத்தின் தலைமைப் பொறியாளர் எஸ்.கிருஷ்ணப்பா, செய்தியாளர்களிடம் கூறியது:
பெங்களூருவுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆங்காங்கே குடிநீர்த் தொட்டிகள் அமைத்து, பம்ப் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக மாதம் 60 மில்லியன் யூனிட் மின்சாரம் செலவாகிறது.
மின்சாரச் செலவினங்கள் காரணமாக வாரியத்தின் வருவாய் குறைத்து வருவதால், மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக பெங்களூருவில் தினமும் உற்பத்தியாகும் ஆயிரம் மில்லியன் லிட்டர் கழிவுநீரில் இருந்து 100 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கத் திட்டம் வகுத்துள்ளோம்.
100 மெகா வாட் மின்சாரம் தயாரித்தால், வாரியத்துக்குத் தேவையான 75 சத மின் தேவை நிறைவு செய்ய முடியும். எனவே, மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக 14 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அடையாளப்படுத்தியிருக்கிறோம்.
கழிவுநீரில் இருந்து மீத்தேன் என்ற வேதிப் பொருள் உற்பத்தியாகும். மீத்தேன் உற்பத்திக்காக டைஜெஸ்டர் என்ற கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். டைஜெஸ்டரில் இருந்து தூய்மையான மீத்தேன் பெறுவதே மிகப்பெரிய சவாலாகும். மீத்தேன் தூய்மையாக இல்லாவிடில், மீத்தேனை எரிக்கும் ஜெனரேட்டர் (மின் உற்பத்திக் கருவி) எளிதில் பழுதடையும்.
முதல் கட்டமாக கர்நாடக மாநிலம், ஹெப்பாளில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின் உற்பத்திக்கான நடைமுறைகளைத் தொடங்கியுள்ளோம். இதற்காக பிரிட்டன் நாட்டின் மோட் மெக்டொனால்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அங்கிருந்து ஒரு மெகாவாட் மின் உற்பத்திக்கான ஜெனரேட்டரை இறக்குமதி செய்துள்ளோம். மேலும், மின் உற்பத்தி நிலையத்தில் டைஜெஸ்டர் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, வெகுவிரைவில் மின் உற்பத்திப் பணி தொடங்கும் என்றார் அவர்.
பேட்டியின் போது, மோட் மெக்டொனால்டு நிறுவனத்தின் குழுத் தலைவர் பி.டெய்லர் உடனிருந்தார்.
Category: துனுக்குகள்
0 comments