பெரம்பலூர்"புத்தகத் திருவிழாவில் ரூ. 2 கோடி புத்தகங்கள் விற்பனை செய்ய இலக்கு'
பெரம்பலூரில் ஜன. 31 முதல் பிப். 9-ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் ரூ. 2 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் புத்தக திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னேற்பாடு கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் மேலும் பேசியது:
பெரம்பலூர் நகராட்சி திடலில் மாவட்ட நிர்வாகம், புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் சார்பில் புத்தகத் திருவிழா -2014 நடைபெற உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 53 அரங்குகள் அமைக்கப்பட்டு, ரூ. 37 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. 2013-ம் ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, 5 லட்சத்துக்கும் மேலான புத்தகங்கள் இடம்பெற்றன. இதில், ரூ. 1 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. நிகழாண்டு நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், கணினி, சமையல், வர்த்தகம், இலக்கியம், விவசாயம், நாட்டுப்புறக் கலை, பண்பாடு, ஓவியம் என அனைத்து வகை புத்தகங்களுக்கும் தனித் தனியாக அமைக்கப்பட உள்ள 100 அரங்குகளில், 70-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இடம் பெற உள்ளன.
மேலும், இந்த புத்தகத் திருவிழாவில் ரூ. 2 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 நாள்கள் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் அறிஞர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். பதிப்பாளர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மேலும், நாள்தோறும் தலைசிறந்த உலகப் புகழ்பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.
கூட்டத்தில் தனலட்சுமி சினிவாசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் பி. மணி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.எஸ். விவேகானந்தன், சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் பி. கார்த்திகேயன், ரோவர் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பாளர் டி. சேகர், மக்கள் பண்பாட்டு மன்றத் தலைவர் சரவணன், செயலர் ஜே. அரவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments