பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு 16ஆயிரத்து 371 வாகன விதிமுறைமீறல் வழக்குகள் பதிவு போலீஸ் சூப்பிரண்டு பேட்டி!
பெரம்பலூர், ஜன.2-
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 16ஆயிரத்து 371 வாகன விதிமுறைமீறல் வழக்குகளில் ரூ.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
பேட்டி
பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்துமுடிந்துள்ள 2013-ம்ஆண்டில் போலீஸ் துறையில் குற்றவழக்குகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரம்பலூர் பைபாஸ் சாலையில் மிலிட்டரி கேண்டீன் வாகனத்தில் இருந்துதிருடப்பட்ட பொருட்களும், பெரம்பலூர் மற்றும் பாடாலூர் பகுதிகளில் டயர் ஷோரூம்களில் இருந்து திருடிச்செல்லப்பட்ட பலலட்சம் ரூபாய் மதிப்பிலான டயர்கள், லாரி, கார்கள் திருடுபோன வழக்குகள் துப்புதுலக்கப்பட்டு அனைத்து வழக்குகளிலும் எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.அதில் ரூ.1கோடியே 51 லட்சத்து 35ஆயிரத்து 850 மதிப்புள்ள சொத்துகள் கைப்பற்றப்பட்டன.
வாகன விதிமுறை மீறல்
வாகன விபத்துக்களைதடுக்கும்பொருட்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீதும், குடிபோதையில் வாகனங்கள் ஓட்டியவர்கள் மீதும் மொத்தம் 16 ஆயிரத்து 371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவற்றில் 142 வழக்குகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச்சென்றவர்கள்மீதும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டிய 780 பேர் மீதும், உரிமம் இல்லாமல் இருத்தல், வாகனத்திற்கு உரிய ஆவணங்களை வைத்திருக்காமல் இருத்தல், தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டிச்செல்லுதல் உள்பட 15ஆயிரத்து 449 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.24 லட்சத்து 91 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
குண்டர் சட்டம்
2013-ம்ஆண்டில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும், மதுவிலக்கு தடுப்பு காவல்சட்டத்தில்கீழ் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெண்களுக்கு எதிராக 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் குறித்து 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 92 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகப்படும்வகையில் இருந்ததாக 259 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 124 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 84 வழக்குகள் துப்புதுலக்கப்பட்டுள்ளது. களவுபோன 85சதவீதம் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
கேக் வழங்கினார்
முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா பெரம்பலூரை அடுத்த செஞ்சேரியில் எச்.ஐ,,வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இல்லத்தில் அவர்களை நேரில் சந்தித்து புத்தாண்டை முன்னிட்டு கேக் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Category: மாவட்ட செய்தி
0 comments