முதல்வர் அறிவித்த "நலத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படும்'-தரேஸ் அஹமது அறிவிப்பு!
தமிழக அரசின் அறிவுரைப்படி, மக்களுக்கான நலத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் தெரிவித்தது:
தமிழக முதல்வர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில், மாவட்ட நிர்வாகத்தைத் திறம்படச் செயல்படுத்துவது, நலத் திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்துவது குறித்து, தமிழக முதல்வர் அறிவுரை வழங்கினார். அவற்றைப் பின்பற்றி பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும்.
தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் மின் ஆளுமைத் திட்டத்திற்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகப்படியான நலத் திட்டங்களை வழங்கியதற்கும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதலிடத்திற்கான விருதும், சுகாதாரத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியருக்கான விருது, சுற்றுச்சூழல் பராமரிப்பு பசுமை விருது 2013-க்கு 3-வது இடத்திற்குரிய விருதும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது கிடைக்கும் வகையில் உழைத்த, அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கும் பாராட்டு. இனிவரும் காலங்களிலும், அரசின் நலத் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாகச் சென்றடையும் வகையில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் செயல்படும்.
பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சிக்காக, வேப்பந்தட்டையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மங்களமேட்டில் காவல் துணைக் கோட்ட அலுவலருக்கு குடியிருப்புடன் இணைந்த அலுவலகம், வி. களத்தூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம், மேல்நந்தி ஆறு - மருதையாறு துணை வடிநிலத்தில் 14 குளங்கள் மற்றும் 2 அணைக்கட்டுகள் நவீனமயமாக்கப்பட்டு புதுப்பித்தல், கல்பாடி சாலையில் மருதையாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைத்தல், திருச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடமாக உருவாக்குதல், கிருஷ்ணாபுரம் - வெண்பாவூர், பெரியவடகரை - கை.களத்தூர் - பில்லாங்குளம் - கூகையூர் சாலைகள் பிரதான மாவட்டச் சாலைகளாகத் தரம் உயர்த்துதல், துறையூர் - பெரம்பலூர் சாலை மேம்படுத்துதல், செந்துறை - அங்கனூர் - நக்கம்பாடி - புதுவேட்டக்குடி - நன்னை - எறையூர் சாலைகள் மற்றும் ஆலத்தூர் - அரியலூர் சாலை மாநில நெடுஞ்சாலைகளாகத் தரம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது என்றார் ஆட்சியர்.
மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த. மலையாளம், தனித் துணை ஆட்சியர் (சிறப்புத் திட்ட அமலாக்கம்) இரா. ரேவதி, மாவட்ட சமூக நல அலுவலர் கே. பேச்சியம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments