வங்கி சேவையில் குறைபாடு இருக்கா? புகார் தெரிவிக்க ரிசர்வ் வங்கி அழைப்பு!
வங்கி சேவையில் குறைபாடு இருந்தால், சென்னையில் உள்ள வங்கி குறை தீர்ப்பாளர் அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கலாம்,’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைகேட்பு கூட்டம்:ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா உதவியுடன், சென்னையில், வங்கி குறை தீர்ப்பாளர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், வாடிக்கையாளர் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் தெற்கு ரோட்டரி கிளப் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ராஜாராம் தலைமை வகித்தார். வங்கி குறை தீர்ப்பாளர் அலுவலக மேலாளர் நிரஞ்சன், உதவி பொது மேலாளர் ஜெயராஜா உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
சென்னை வங்கி குறை தீர்ப்பாளர், அலுவலக செயலர் ருச்சி ஆஸ்தானா பேசியதாவது:வணிக, கிராமப் புற வங்கிகள் மட்டுமின்றி, கூட்டுறவு வங்கி குறித்த புகார்களையும் தெரிவிக்கலாம். கணக்கு துவக்க மறுத்தால்; கணக்கு முடிக்க மறுத்தால்; முன்னறிவிப்பின்றி சேவை கட்டணம் வசூலித்தால்; வைப்புத்தொகை மீதான வட்டியில், இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாமல் இருந்தால் எங்களிடம் புகார் தெரிவிக்கலாம்.கடன் அளிக்க ஏன் மறுக்கின்றனர்; உங்களது விண்ணப்பம் நிராகரிப்பதற்கான காரணம் மட்டுமே நாங்கள் தெரிவிப்போம். இவர்களுக்கு கடன் வழங்குங்கள் என, பரிந்துரைக்க மாட்டோம். எங்கள் விசாரணையின் போது, வங்கி தெரிவிக்கும் பதிலை வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்போம்.
‘பாஸ்வேர்ட்டை’ தெரிவிக்காதீர்:ஒரு வங்கியில் இருந்து கடன் பெறுவதற்கு குறிப்பிட்ட சில கொள்கை, விதிமுறைகளை அவ்வங்கி வைத்திருக்கும். அதை மீறி செயல்பட, நிர்பந்திக்க முடியாது. கல்வி கடன் வழங்குவதில் தாமதம், ஏ.டி.எம்., கார்டு பிரச்னை குறித்து அதிக புகார்கள் வருகின்றன. குடும்ப உறுப்பினர், நெருங்கிய நண்பர்களுக்கு கூட உங்கள் ஏ.டி.எம்., கார்டின் ‘பாஸ்வேர்ட்டை’ தெரிவிக்காதீர். அது, உங்களுக்கு பிரச்னையாக முடியும்.
புகார்களை, முதலில் உங்கள் ஊரில் உள்ள கிளை, தலைமை வங்கியில் எழுத்துப்பூர்வமாக தெரிவியுங்கள். 30 நாட்களுக்குள், அவர்கள் பதிலளிக்க வேண்டும். இல்லையெனில், எங்களுக்கு, வங்கி குறை தீர்ப்பாளர், இந்திய ரிசர்வ் வங்கி, 16, கோட்டை சரிவு, ராஜாஜி சாலை, சென்னை 600 001, என்ற முகவரிக்கு புகார் அனுப்புங்கள்.கோர்ட் தீர்ப்பு கூறிய அல்லது நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான குறைகள், ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் சந்தேகங்களுக்கு, 044 – - 2539 5964 எண்ணில் தொடர்பு கொள்ள லாம். 1,000 கோடி ரூபாய்க்கு, அதிகமாக பண பரிவர்த்தனை வர்த்தகம் நாள்தோறும் நடக்கும் திருப்பூரில் இருந்து, எங்களுக்கு, 43 புகார்களே வந்து உள்ளன.இவ்வாறு, ருச்சிஆஸ்தானா பேசினார்.
Category: மாநில செய்தி


0 comments